சாயக் கழிவுநீரை வெளியேற்றிய 3 ஆலைகளின் மின் இணைப்புத் துண்டிப்பு

சாயக் கழிவுநீரை வெளியேற்றிய 3 ஆலைகளின் மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டது.

சாயக் கழிவுநீரை வெளியேற்றிய 3 ஆலைகளின் மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டது.
ஈரோடு சுற்று வட்டாரப் பகுதிகளில் சாய, தோல் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.  இந்த ஆலைகள் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றுகிறதா என்பது குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அவ்வப்போது கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் மலையாண்டி தலைமையில் உதவி சுற்றுச் சூழல் பொறியாளர் மோகன், உதவிப் பொறியாளர்கள் ஜோதி வெங்கட்ராமன், ராஜ்குமார், பறக்கும்படை பொறியாளர் பழனிசாமி, உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் புதன்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஈரோடு - பவானி பிரதான சாலையில் உள்ள ஒரு சாய தொழிற்சாலையில் இருந்து கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றியது தெரியவந்தது. இதையடுத்து, அந்த தொழிற்சாலையில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்துள்ளனர்.
இந்த ஆய்வில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் காலிங்கராயன் வாய்க்கால் பகுதியில் உள்ள பேபி கால்வாயில் கலந்துவிட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்த ஆலையின் மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சித்தோடு பகுதியில் ஆய்வு செய்தபோது அங்குள்ள சாய தொழிற்சாலையில் இருந்து கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றியது கண்டறியப்பட்டு அந்த ஆலையின் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
பின்னர், வீரப்பன்சத்திரம் காவிரிநகர் பகுதியில் ஆய்வு செய்தபோது அங்குள்ள ஒரு சாய தொழிற்சாலையில் இருந்து கழிவுநீரை சாக்கடையில் திறந்துவிட்டது தெரியவந்தது. இந்த ஆலையின் மின் இணைப்பையும் துண்டித்தனர். பின்னர், 3 ஆலைகளுக்கும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறுகையில், ஈரோடு பகுதிகளில் உள்ள சாய, தோல் தொழிற்சாலைகள் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றுகிறதா என்பது குறித்து தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நடத்தப்பட்ட சோதனையில் சாயக் கழிவுநீரை வெளியேற்றியது தொடர்பாக 3 ஆலைகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஆய்வுகள் நடத்தப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com