பர்கூர் மலைப் பகுதியில் பெய்த பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு: மழை நீரில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்

பர்கூர் மற்றும் அந்தியூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு விடியவிடிய பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து

பர்கூர் மற்றும் அந்தியூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு விடியவிடிய பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், துருசனாம்பாளையத்தில் வெள்ளநீரில் தரைப்பாலம் சேதமடைந்தது.
அந்தியூர், அம்மாபேட்டை மற்றும் பவானி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை விடியவிடியக் கொட்டித் தீர்த்தது. இதனால், மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது.
அந்தியூரை அடுத்துள்ள பர்கூர் ஊராட்சி, துருசனாம்பாளையத்தில் பெருக்கெடுத்த மழை வெள்ளம் அப்பகுதி சாலையில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்துச் சென்றது. இதில், தரைப்பாலம் சேதமடைந்தது. மேலும், சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரும் மழை வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டது.
இந்த மழையால் துருசனாம்பாளையம், தட்டக்கரை பகுதி மலைக் கிராமங்களில் 7 வீடுகள் இடிந்து சேதமடைந்தன.
பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பர்கூர் மலைப் பாதையில் சிறிய அளவிலான கற்கள் அதிக அளவில் மழைநீரில் அடித்து வரப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். அம்மாபேட்டை பகுதியில் பெய்த பலத்த மழையால் பாலமலை பகுதியிலிருந்து பெருக்கெடுத்த வெள்ளத்தால், பள்ளங்கள் நிறைந்து ஏரிகளுக்குத் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்நிலையில், சிங்கம்பேட்டையை அடுத்த சின்னமேட்டூரில் பழனியம்மாள் (60) என்பவருக்குச் சொந்தமான கீற்றுக் கொட்டகையில் இடி தாக்கியதில் அதில் இருந்த பிளாஸ்டிக் பைப்புகள், மோட்டார்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. பவானியில் தேனீர் கடையின் சுவர் இடிந்து விழுந்தது. பவானி, அம்மாபேட்டை, அந்தியூர் வட்டாரத்தில் பெய்து வரும் தொடர்மழை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com