ரூ. 484.54 கோடியில் ஊராட்சிக்கோட்டை குடிநீர்த் திட்டப் பணிகள் தீவிரம்

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் ரூ. 484.54 கோடியில் செயல்படுத்தப்படவுள்ள ஊராட்சிக்கோட்டை குடிநீர்த் திட்டத்துக்கான ஆயத்தப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.  

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் ரூ. 484.54 கோடியில் செயல்படுத்தப்படவுள்ள ஊராட்சிக்கோட்டை குடிநீர்த் திட்டத்துக்கான ஆயத்தப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.  
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதி மக்களுக்கு காவிரி ஆற்றில் இருந்து பி.பெ.அக்ரஹாரம், வைராபாளையம், வெண்டிபாளையம், கருங்கல்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
சாய, தோல் ஆலைக் கழிவுகள், நாமக்கல் மாவட்டம், எஸ்.பி.பி. காலனியில் உள்ள காகித ஆலைக் கழிவுகள், சாக்கடைக் கழிவுகள் போன்றவை கலக்கும் நிலையில் மேற்கண்ட பகுதிகளில் இருந்து பெறப்படும் குடிநீர் தரமின்றி இருப்பதாகவும், அந்தக் குடிநீரைப் பயன்படுத்துவோருக்கு தோல் ஒவ்வாமை,  ஆஸ்துமா, புற்றுநோய் போன்றவை ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இந்நிலையில், ஊராட்சிக்கோட்டையில் இருந்து தூய்மையான குடிநீரை விநியோகம் செய்ய வேண்டும் என்பது ஈரோடு மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
இதுகுறித்து, ஈரோடு மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பணிகளைத் தொடங்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்காக மாநகராட்சி மூலமாகத் திட்ட மதிப்பீடு தயாரித்து, அரசுக்கு கருத்துருவும் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், எதிர்பாராத விதமாக இப்பணிகளை மேற்கொள்ள குடிநீர் வடிகால் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டு, ஒப்பந்தப் புள்ளியும் இறுதி செய்யப்பட்டு, கடந்த ஜூன் மாதம் ஈரோடு வருகை தந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இப்பணிகளைத் தொடக்கிவைத்தார்.
இதைதொடர்ந்து, ஊராட்சிக்கோட்டை  குடிநீர்த் திட்டப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.  இதற்காக ஊராட்சிக்கோட்டை, வரதநல்லூர் கதவணை அருகே குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கிருந்து நாள் ஒன்றுக்கு 54 லட்சம் லிட்டர் குடிநீர் நீரேற்றம் செய்து,  மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் தேக்கி வைத்து, அங்கிருந்து பெரிய குழாய்கள் மூலமாக ஈரோடு மாநகராட்சிக்கு தண்ணீர் கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டு, வில்லரசம்பட்டி நால்ரோடு, திண்டல், எல்லப்பாளையம் சாலை போன்ற பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக சாலையோரமாக இரும்புக் குழாய்கள் வைக்கப்பட்டுள்ளன.  
இதுகுறித்து, குடிநீர் வடிகால்வாரிய உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:  
முதலில் ஊராட்சிக்கோட்டையில் இருந்து பவானி, கூடுதுறை பகுதியில் தனிப் பாலம் அமைத்து, லட்சுமி நகர் 4 வழிச்சாலை பகுதியில் குழாய் பதித்து, ஈரோடு சாலை வழியாக சூரியம்பாளையம் பகுதிக்கு தண்ணீர்க் குழாய்கள் பதிக்கப்படும். சூரியம்பாளையம் பகுதியில் 54 லட்சம் லிட்டர் குடிநீரைத் தேக்கி வைக்கும் வகையில் கீழ்நிலைத் தொட்டி அமைத்து, அங்கிருந்து இரு பிரிவாக குழாய் அமைக்கப்படும். அதில் ஒரு பகுதி சித்தோடு பகுதிக்கும், மற்றொரு பகுதி வில்லரசம்பட்டி,  திண்டல், வித்யா நகர், ரங்கம்பாளையம் வரையிலும் கொண்டு செல்லப்படும்.
சூரியம்பாளையத்தில் இருந்து மேலும் ஒரு இணைப்பாக வ.உ.சி. பூங்கா மைதானத்தில் உள்ள குடிநீர்த் தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள 115 லட்சம் லிட்டர் குடிநீரை தேக்கி வைத்து, மக்களுக்கு விநியோகம் செய்யப்படும்.
இப்புதிய திட்டத்தின்படி மொத்தம் 21 இடங்களில் புதிதாக மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் கட்டப்படும்.  வித்யா நகர், கணபதி நகர், ஓடக்காட்டுவலசு ஆகிய பகுதிகளில் தரைமட்டத் தொட்டி கட்டி மோட்டார் மூலமாக நீரேற்றம் செய்து குடிநீர் விநியோகம் செய்யப்படும். இப்பணிகள் அனைத்தும் 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் அதாவது 2 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்.
குடிநீர்க் குழாய்கள் அனைத்தும் சாலையோரமாக பதிக்கப்படவுள்ளன. இந்தப் பணிக்காக தற்போது பெரிய குழாய்களை சாலையோரம் வைத்துள்ளோம். விரைவில் குழிதோண்டி அவற்றைப் பதிக்கும் பணி தொடங்கிவிடும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com