'தொழிற்சாலைகளில் டெங்கு கொசு உருவாகும் சூழ்நிலை கண்டறியப்பட்டால் நடவடிக்கை'

தொழிற்சாலைகளில் டெங்கு கொசு உருவாகும் சூழ்நிலை கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொழிற்சாலைகளில் டெங்கு கொசு உருவாகும் சூழ்நிலை கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை, சென்னிமலை பேரூராட்சிப் பகுதிகளில் டெங்கு கொசு தடுப்பு, விழிப்புணர்வுப் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிரபாகர் திங்கள்கிழமை ஆய்வு செய்தார். பின்னர், ஆட்சியர் கூறியதாவது:
டெங்கு கொசு ஒழிக்கும் பணி போர்க்கால அடிப்படையில் மாவட்டம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காய்ச்சல் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிர நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், வழிகாட்டுதலின் படியும், ஈரோடு மாவட்டத்தில் காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கை பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிக்கும் பணி மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் என அனைத்து நகர, கிராமப் பகுதிகளில் 30 சுகாதார ஆய்வாளர்களைக் கொண்டு அரசு தலைமை மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தனியார் மருத்துவமனைகளில் நடைபெற்று வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உள்பட்ட காய்ச்சல் கண்டுள்ள பகுதிகளில் நடமாடும் மருத்துவக் குழுக்களைக் கொண்டு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், ஈரோடு மாவட்டத்தில் 28 பள்ளி சுகாதார நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் அனைத்துப் பள்ளிகளுக்கும் சென்று காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு கல்வி வழங்கப்பட்டு, ஒவ்வொரு பள்ளியிலும் மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் காய்ச்சல் தடுப்புப் பணிக்கு, கொசுப் புழு ஒழிப்பதற்கு களப் பணியாளர்களைக் கொண்டு கொசுப் புழு ஒழிப்பு பணியான அபேட் மருந்து தெளித்தல், கொசுப் புகை மருந்து அடிக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மாவட்டம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கொசு புழுக்களை ஒழிப்பதற்கு அபேட் மருந்து தண்ணீரில் ஊற்றப்படுகிறது. நிலவேம்புக் குடிநீர் காய்ச்சல் கண்ட பகுதிகளில் வழங்கப்படுகிறது. துண்டுப் பிரசுரங்கள் வழங்கி காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் தங்களது வீட்டில் உள்ள தண்ணீர்த் தொட்டிகளை சாம்பல் அல்லது பிளீச்சிங் பவுடரைக் கொண்டு சுத்தமாக கழுவி உலர்த்திய பிறகு தண்ணீர்ப் பிடிக்க வேண்டும். பிடித்த தண்ணீரை காற்று புகாவண்ணம் துணிகளைக்கொண்டு கட்டி மூடிவைக்க வேண்டும். சுகாதாரப் பணியாளர்கள் வரும்போது வீட்டின் உள்புறம் புகை மருந்து அடிக்க அனுமதி அளித்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
அவ்வாறு ஒத்துழைப்பு அளிக்காதவர்கள் மீதும், கொசுப்புழு வீட்டில் வளர்ப்பவர்கள் மீதும் பொது சுகாதாரத் துறை சட்டத்தின்கீழ் அபராதம் விதிக்கப்படும். வீடுகள் மட்டுமின்றி தொழிற்சாலைகளிலும் டெங்கு கொசு உருவாகும் சூழ்நிலை கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
காய்ச்சல் கண்ட நபர்கள் எவரேனும் இருப்பின் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தையோ அல்லது அரசு மருத்துவமனைகளையோ அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
பெருந்துறை பேரூராட்சியில் ஆய்வு மேற்கொண்டபோது அப்பகுதியில் உள்ள கடையின் வெளிப்புறம் டெங்கு கொசு உருவாகும் நிலையில் காலி குளிர்பான பாட்டில்கள் கண்டறியப்பட்டன. உடனடியாக அலுவலர்கள் மூலம் கடை உரிமையாளர் எச்சரிக்கப்பட்டதுடன், நோட்டீஸ் வழங்கி அபராதம் விதிக்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து, சென்னிமலை பேரூராட்சியில் தனியார் மழலையர் பள்ளியில் தூய்மைப் பணி தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது டெங்கு கொசு உருவாகும் சூழ்நிலை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து பள்ளியின் உரிமையாளருக்கு அலுவலர்கள் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டு எச்சரிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com