தனியார் பேருந்து மோதியதில் பெண் சாவு: பொதுமக்கள் சாலை மறியல்

பவானி அருகே தனியார் நிறுவனப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உயிரிழந்தார். இவரது கணவர், குழந்தை படுகாயமடைந்தனர். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை

பவானி அருகே தனியார் நிறுவனப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உயிரிழந்தார். இவரது கணவர், குழந்தை படுகாயமடைந்தனர். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சித்தோட்டை அடுத்த அமராவதி நகரைச் சேர்ந்தவர் ஞானசேகரன் (41). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி கெளசல்யா (35). இவர்கள் மகள் வன்சிகா (5) முதலாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், வன்சிகாவை ராஜலட்சுமி மில் அருகே உள்ள தனியார் பள்ளியில் விடுவதற்கு மூவரும் இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை காலை சென்றுள்ளனர்.
பவானி - ஈரோடு சாலையில் பெருமாள் மலை அருகே சென்றபோது எதிரே வந்த தனியார் நிறுவனத்துக்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மோதியதில் மூவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், பலத்த காயமடைந்த கெளசல்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் ஞானசேகரன், வன்சிகா ஆகியோர் ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவ்விபத்தைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு விபத்து ஏற்படுத்திய பேருந்தின் கண்ணாடியை உடைத்தனர். மேலும், அடுத்தடுத்து வந்த அந்நிறுவன பேருந்துகளின் டயர்களின் காற்றைப் பிடுங்கி விட்டதோடு, மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பவானி காவல்துணைக் கண்காணிப்பாளர் ஜானகிராம் தலைமையிலான போலீஸார் பொதுமக்களிடம் பேச்சு நடத்தியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com