ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டு அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை: அக்டோபர் 5-ஆம் தேதி போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு

ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டு, மின்தூக்கி அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி, சங்கு ஊதும் போராட்டத்தை அக்டோபர் 5-ஆம் தேதி நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டு, மின்தூக்கி அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி, சங்கு ஊதும் போராட்டத்தை அக்டோபர் 5-ஆம் தேதி நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, இக்கட்சியின் சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவரும், தென்னக ரயில்வே ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினருமான கே.என்.பாஷா வெள்ளிக்கிழமை விடுத்த அறிக்கை:
ஈரோடு ரயில் நிலையத்தில் மாற்றுத் திறனாளிகள், வயது முதிர்ந்த ஆண்கள், பெண்கள் ரயில் பயணத்தின்போது படிக்கட்டுகள் வழியாக ஏற முடியாமலும், இறங்க முடியாமலும் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில், ரயில்வே நிர்வாகம் ரூ. 3 கோடி செலவில் ஈரோடு ரயில் நிலையத்தில் நடைமேடைகளில் நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கி வசதி செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது.
இப்பணிகள் 2015-ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என்று ரயில்வே உயர் அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால், இப்பணிகளை ஆமை வேகத்தைக் காட்டிலும் மிகவும் தாமதமாக செய்து வருகின்றனர்.
இதுகுறித்து, ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு பலமுறை கடிதம் மூலமாகவும், ஆகஸ்ட் 20-ஆம் தேதி மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைத் துறை மூலமாக கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினோம். இன்னும் இப்பணிகள் முடிய ஓராண்டுக்குமேல் ஆகும் எனத் தெரிகிறது.
எனவே, ஈரோடு ரயில் நிலையம் எதிரில் அக்டோபர் 5-ஆம் தேதி காலை 10 மணி அளவில் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைத் துறை சார்பில் சங்கு ஊதும் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com