பவானியில் காவிரி புஷ்கர வழிபாடு கோலாகலத் தொடக்கம்

ஈரோடு மாவட்டம்,  பவானி கூடுதுறையில் காவிரி புஷ்கர வழிபாடு புதன்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது.  இதில்,  மடாதிபதிகள், ஆன்மிகவாதிகள், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

ஈரோடு மாவட்டம்,  பவானி கூடுதுறையில் காவிரி புஷ்கர வழிபாடு புதன்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது.  இதில்,  மடாதிபதிகள், ஆன்மிகவாதிகள், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
குருபகவான் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை துலாம் ராசியில் பிரவேசிக்கும் காலம் காவிரி புஷ்கரம் எனவும்,  144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்வது மகா புஷ்கரம் என்றும் அழைக்கப்படுகிறது. இதில்,  பங்கேற்று காவிரியில் நீராடுவது 12 கும்பாபிஷேகங்கள், 12 கும்பமேளாக்களில் பங்கேற்ற புண்ணியத்தை தரும் என நம்பப்படுகிறது.
பவானி கூடுதுறையில் காவிரி ஆற்றில் ஐந்து நாள்கள் நடைபெறும் புஷ்கர விழாவையொட்டி, புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள எல்லையம்மன் கோயில் முன்பிருந்து யானைகள்,  குதிரைகள்,  மாடுகள் சிறப்பு அலங்காரத்துடன் கூடுதுறைக்கு மேள தாளங்கள் முழங்க அழைத்துச் செல்லப்பட்டன.
இதில்,  பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த சாதுக்கள், மடாதிபதிகள், ஆன்மிகவாதிகள் பங்கேற்றனர்.
தொடர்ந்து,  கணபதி ஹோமம் நடத்தப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.  இதையடுத்து,  சாதுக்கள், மடாதிபதிகள், பீடாதிபதிகள் காவிரித் தாய்க்கு வழிபாடு நடத்தி புனித நீராடினர்.
இதையடுத்து,  ஆன்மிகச் சொற்பொழிவு, அன்னதானம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து,  மாலையில் காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான  யாக மேடையில் ஹோமம் வளர்க்கப்பட்டு காவிரி அன்னைக்கு வழிபாடு நடத்தப்பட்டது.
தொடர்ந்து, காவிரியில் மலர்தூவி மரியாதை செய்யப்பட்டதோடு,  மகா ஆரத்தி வழிபாடும் நடைபெற்றது.
பவானி கூடுதுறை கிழக்குவாசல் படித்துறையில் நடைபெற்ற வழிபாட்டில் கோவை கெளமார மடம் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள்,  பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார்,  கலவை சச்சிதானந்த சுவாமிகள், வேலூர் பாலமுருகன் அடிமைகள்,  திருவலம் சாந்தானந்தா சுவாமிகள்,  மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் சம்பத்குமார ராமானுஜ ஜியர் சுவாமிகள், வேலாக்குறிச்சி ஆதீனம், பாதரக்குடி ஆதீனம் ரவீந்திர சுவாமிகள், வாராகி மணிகண்ட சுவாமிகள், அகில பாரதிய துறவியர் சங்கத்தின் கொங்கு மண்டலச் செயலர் ஸ்ரீமத் யுக்தேஷ்வரானந்தபுரி,  பாஜக மாநிலப் பொதுச் செயலர் வானதி சீனிவாசன்,   மாநிலச் செயலர் செந்தில் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பவானி காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜானகிராம் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கொடுமுடியில்...:
மும்மூர்த்திகளின் ஆலயமான கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில் முன்புசேரும்  காவிரி அறு அங்கிருந்து  கிழக்கு நோக்கிச் செல்கிறது. பிரசித்தி பெற்ற இக்கரையில்  காவிரி புஷ்கர வழிபாடு புதன்கிழமை  நடைபெற்றது.
இந்த வழிபாட்டுக்கு  அகில இந்திய பாரத துறவிகள் பேரவையின் அமைப்பாளர் ராமநாத் சுவாமிகள் தலைமை வகித்தார். இதில்,  காவிரி புஷ்கரம் குறித்து துறவிகள் சொற்பொழிவு ஆற்றினர்.
இதைத் தொடர்ந்து,  நெடூர்அமர்நாத் சுவாமிகள்,  கரூர் பாலமுருக சுவாமிகள்,  கோவையைச் சேர்ந்த நிர்மலா மாதா சுவாமிகள்,  குஜராத்தைச் சேர்ந்த அம்பாபுரி சுவாமிகள் உள்ளிட்டோர் ஊர்வலமாக காவிரி ஆற்றுக்கு வந்தனர்.
அங்கு கொடுமுடி ஆதீனம் சிவாச்சாரியர்,  பிரபு ஆகியோர் வேதங்களை ஓதினர். பின்னர்,  காவிரி ஆற்றில் அனைவரும் மலர்தூவி  வழிபட்டதுடன், புனித  நீராடினர்.  அங்கிருந்து அனைவரும் கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபட்டனர். இதைத் தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com