சூளை, எழுமாத்தூரில் இருந்து 108 ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட சூளை, எழுமாத்தூர் பகுதிகளில் இருந்து 108 ஆம்புலன்ஸ் சேவையை மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் சனிக்கிழமை தொடக்கிவைத்தார்.

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட சூளை, எழுமாத்தூர் பகுதிகளில் இருந்து 108 ஆம்புலன்ஸ் சேவையை மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் சனிக்கிழமை தொடக்கிவைத்தார்.
ஈரோடு மாநகராட்சி சூளை, மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட எழுமாத்தூர் உள்ளிட்ட பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவையை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் பிரபாகர் தொடக்கிவைத்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவை தற்போது 882 ஆம்புலன்ஸ்களுடன் தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது அவசர அழைப்பு பெறப்பட்ட 15 முதல் 20 நிமிடங்களில் நகர்ப்புறம், கிராமப் புறங்களுக்கு சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தை மேலும் குறைக்கவும், அவசர காலத்தில் விரைவில் சேவை தர வேண்டும் என்பதற்காகவும் தற்போது ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. அழைப்பவரின் இடத்தை துல்லியமாகத் தெரிந்துகொள்ள விரைவில் அனைத்து ஆம்புலன்ஸ்களுக்கும் ஆன்ட்ராய்டு செல்லிடப்பேசி விரைவில் வழங்கப்படவுள்ளது.
தற்போது ஈரோடு மாவட்டத்தில் 30 வாகனத்துடன் அனைத்து இடங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மலைவாழ் மக்களின் நலனுக்காக மலைப் பகுதியில் ஐந்து 108 இலவச அவசர கால ஊர்தி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 108 ஆம்புலன்ஸ் தேவையும், பயன்பாடும் அதிகரித்துள்ளதால் அதிக அழைப்பு வரக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டத்தில் சூளை, எழுமாத்தூர் பகுதிகளுக்கு இரண்டு ஆம்புலன்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் மாதம் மட்டும் ஈரோடு மாவட்டத்தில் 3,981 நபர்கள் 108 சேவையைப் பயன்படுத்தி உள்ளனர். இச்சேவை தொடங்கியதில் இருந்து இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும். பிறந்த 28 நாள்களுக்கு உள்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ் ஈரோடு, கோபி மருத்துவமனையில் இன்குபேட்டர், வெண்டிலேட்டர் வசதிகளுடன் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சராசரியாக மாதந்தோறும் 60-க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் காப்பாற்றப்பட்டு வருகின்றனர் என்றார்.
முன்னதாக மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின்கீழ், தாளவாடி வட்டாரத்துக்கு உள்பட்ட மலைப் பிரதேச கிராமங்களில் உள்ள கர்ப்பிணிகளை சிகிச்சைக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏதுவாக தாளவாடி வட்டாரப் பகுதி சுகாதார நிலையத்துக்கு தாய், சேய் நல சிற்றுந்து வாகனத்தை ஆட்சியர் பிரபாகர் தொடக்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (நலப் பணிகள்) கனகாசலகுமார், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) பாலுசாமி, ஈரோடு மாவட்ட 108 ஆம்புலன்ஸ் சேவை ஒருங்கிணைப்பாளர் கணேஷ் உள்பட துறைசார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com