பரம்பரை சொத்தில் பங்கு கிடைக்கவில்லை: ஆட்சியர் அலுவலக வளாகத்தில்தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினர்

பரம்பரை நிலங்களை பங்கு பிரிக்காமல் அனுபவிப்பதைத் தடுக்கக் கோரி,  ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குடும்பத்துடன்

பரம்பரை நிலங்களை பங்கு பிரிக்காமல் அனுபவிப்பதைத் தடுக்கக் கோரி,  ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குடும்பத்துடன் 6 பேர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க திங்கள்கிழமை முயன்றனர்.
 நாமக்கல் மாவட்டம், வெப்படையைச் சேர்ந்த மஞ்சுளா(70), அவரது மகன்கள் பிரகாஷ் (38), கார்த்தி (36), மருமகள்கள் செல்வி (30), ருக்குமணி (28), பேரன் விக்னேஷ் (2) ஆகியோர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை திரண்டு வந்திருந்தனர்.
 வழக்கம்போல கோரிக்கை மனு அளிக்க வந்ததாகவே அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தபோது, பிரகாஷ் திடீரென தனது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த  மண்ணெண்ணெய் கேனை எடுத்து குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மீதும் ஊற்றியபடி மாவட்ட நிர்வாகம், காவல் துறையால் தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என முழக்கமிட்டனர்.
 இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஆயுதப் படை போலீஸார் விரைந்து சென்று கேனை பறிமுதல் செய்து அனைவர் மீதும் தண்ணீரை ஊற்றினர். அப்போது, இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட மஞ்சுளா என்பவர் நினைவிழந்து கீழே சாய்ந்தார். தண்ணீர் தெளித்து  சிறிது நேரத்தில் நினைவுக்கு வந்த அவர் உள்பட குடும்பத்தினர் 6 பேரையும் வாகனத்தில் ஏற்றி, சூரம்பட்டி காவல் நிலையத்துக்கு போலீஸார் கொண்டு சென்றனர்.
 இதுகுறித்து தீக்குளிக்க முயன்ற பிரகாஷ் கூறியதாவது:
 ஈரோடு, பிரப்சாலை - கோட்டை இடையே உள்ள பிருந்தா வீதியில் தற்போதைய நிலையில் சுமார் ரூ. 50 கோடி மதிப்பிலான 
எங்களது முன்னோரின் சொத்து உள்ளது. எங்கள் தந்தை குருசாமியின் தாத்தா காலத்தில் இச்சொத்துகள் வாங்கப்பட்டன. 
  வாரிசு அடிப்படையில்  எங்களது பங்காளி முறை கொண்ட ஈரோடு மாவட்ட திமுக  துணைச் செயலாளர் செந்தில்குமார் அந்த சொத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து அனுபவித்து வருகிறார். வாரிசுதாரர்களான எங்களுக்குரிய பங்கை தர மறுக்கிறார். 
  இப்பிரச்னைக்கு  நீதிமன்றம் மூலம் தீர்வு பெற விடாமலும், அதிகாரிகளிடம் மனு வழங்கினாலும், காவல் நிலையத்தில்  புகார் செய்தாலும் தடுத்துவிடுகிறார். எங்கள் பங்கை எங்களுக்குப் பிரித்துத் தர வேண்டும் என்பதற்காக தீக்குளிக்க முடிவு செய்ததாகவும் தெரிவித்தார்.
 இதனிடையே குறைகேட்பு முகாமில் பங்கேற்ற ஆட்சியர் எஸ்.பிரபாகர் அலுவலகத்திலிருந்து  வெளியே புறப்பட்டுச் சென்றபோது அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாரிடம் சம்பவம் குறித்து விசாரித்தார். தொடர்ந்து, ஆட்சியர்  அலுவலக வளாகத்தில் 42 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் உதவியுடன் மண்ணெண்ணெயை கொண்டு வந்த நபரைக்  கண்டறிந்து,  அவர் மீதோ அல்லது  மண்ணெண்ணெயை ஊற்றியவர் மீதோ வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். 
  இப்பிரச்னையின் முழு விவரங்கள் குறித்து தீக்குளிக்க முயன்ற ஆறு பேரிடமும் சூரம்பட்டி போலீஸார்  தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் ஏற்கெனவே 5 முறை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com