கீழ்பவானி கொப்பு வாய்க்கால்களை சீரமைக்க வலியுறுத்தல்

கீழ்பவானி பாசனத் திட்டத்தில் பாசனப் பகுதி மேன்மைத் திட்டத்தின்கீழ் சேதமடைந்துள்ள கொப்பு வாய்க்கால்களைச் சீரமைக்க வேண்டும் என

கீழ்பவானி பாசனத் திட்டத்தில் பாசனப் பகுதி மேன்மைத் திட்டத்தின்கீழ் சேதமடைந்துள்ள கொப்பு வாய்க்கால்களைச் சீரமைக்க வேண்டும் என ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே உள்ள தங்கமேடு ஏ.10 கீழ்பவானி முறைநீர்ப் பாசன விவசாயிகள் சபை  வலியுறுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே சபைத்  தலைவர் அ.செ.பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தங்கமேடு ஏ.10 கீழ்பவானி முறைநீர்ப் பாசன விவசாயிகள் சபை பொதுக்குழு, வெள்ளி விழா கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பகிர்மான கமிட்டி தலைவர் கே.ஆர்.லோகநாதன் முன்னிலை வகித்தார். செயலாளர் எஸ்.எம்.சுப்பிரமணியம் பாசன சபை செயல்பாடுகள், குடிமராமத்து பராமரிப்புப் பணிகள் குறித்துப் பேசினார். பொருளாளர் ஏ.ஆர்.ராமசாமி வரவு - செலவு அறிக்கை வாசித்தார். 
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
2017-2018 தணிக்கை செய்யப்பட்ட வரவு - செலவு கணக்குகள், சபை செயல்பாடுகள் ஆகியவற்றை கோபி பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பாசன சபையைப் புதுப்பிக்க தீர்மானிக்கப்பட்டது. 
பாசன விவசாயிகள் கோரிக்கையை ஏற்று பவானிசாகர் அணையிலிருந்து 5.10.2017 முதல் 5.2.2018 வரை 80 நாள்கள் இரட்டைப் படை பாசனப் பகுதிகளுக்கு நீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏ.10 பாசன சபைக்கு 2017-2018 ஆம் ஆண்டுக்கு குடிமராமத்து திட்டத்தின்கீழ் 51/ 7 மேட்டுப்பாளையம் பிரிவு வாய்க்காலில் ரூ. 9.3 லட்சம் செலவில் வாய்க்கால் பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டதற்கும், கசிவுநீர்த் திட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நீண்ட நாள்களுக்குப் பிறகு 341, சலங்கபாளையம், ஆலத்தூர், அனந்தசாகரம் கசிவு நீர்த் திட்ட வாய்க்கால்கள் உலக வங்கி நிதியில் நில நீர்வள திட்டத்தின்கீழ் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டதற்காக தமிழக அரசுக்கும், பொதுப் பணித் துறைக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும்.
 கீழ்பவானி பாசனத் திட்டத்தில் பாசனப் பகுதி மேன்மைத் திட்டத்தில் 26 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கொப்பு வாய்க்கால்கள் பாசனத் திட்டத்தை  முழு ஆய்வு செய்து சேதமடைந்துள்ள அனைத்து கொப்பு வாய்க்கால்களையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, ஏ.10 பாசன சபை வெள்ளி விழா மலரை கீழ்பவானி முறைநீர்ப் பாசன விவசாயிகள் கூட்டமைப்புத் தலைவர் பொ.காசியண்ணன் வெளியிட்டார். இதை, நிர்வாகிகள் பி.எம்.கார்த்திகேயன், யு.சின்னசாமி, நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புத் தலைவர் பா.அ.சென்னியப்பன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். கூட்டத்தில், ஏ.10 பாசன சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இணைச் செயலாளர் எஸ்.பி.முருகேசன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com