கோபியில் 2,500 ஏக்கரில் மானாவாரி மேம்பாட்டுத் திட்டம்: வேளாண்மை உதவி இயக்குநர் தகவல்

கோபி வட்டாரத்தில் 2-ஆம் கட்டமாக 2,500 ஏக்கரில் மானாவாரி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக கோபி வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி தெரிவித்துள்ளார்.

கோபி வட்டாரத்தில் 2-ஆம் கட்டமாக 2,500 ஏக்கரில் மானாவாரி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக கோபி வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி தெரிவித்துள்ளார்.
கோபி அருகே உள்ள கொளப்பலூர் கிராமத்தில் நடைபெற்ற மானாவாரி கிராம விவசாயிகள் மேம்பாட்டுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ர அவர் பேசியதாவது:
 2017-18 ஆம் ஆண்டில் 5 லட்சம் ஏக்கர் பயன்பெறும் விதத்தில் நீடித்த நிலையான மானாவாரி மேம்பாட்டு இயக்கம் எனும் திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு ரூ. 802  கோடி செலவிடப்பட்டது. அதேபோல, 2018-19 ஆம் நிதியாண்டிலும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. 
கோபி வட்டாரத்தில் கடந்த ஆண்டில் சிறுவலூர் வருவாய் கிராமம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் மிகவும் வறட்சியான பகுதியான கொளப்பலூர்,  அயலூர் ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த ஊராட்சிகளுக்கு உள்பட்ட மானாவாரி பகுதிகளில் மொத்தம் 2 ஆயிரத்து 500 ஏக்கரில் டிராக்டர் மூலம் உழவு செய்யும் விவசாயிகளுக்கு உழவு மானியம், விதைகள் உள்ளிட்ட இடு பொருள்களுக்கு 50 சதவீத மானியமும், சுமார் 10 லட்சம் மதிப்பீட்டில் வேளாண் இயந்திரங்கள், மதிப்புக் கூட்டுப் பொருள்கள் தயாரிக்கும் வகையில் இயந்திரங்களும் வழங்கப்படவுள்ளன. இவை தவிர விருப்பம் உள்ள விவசாயிகளின் சொந்த நிலங்களில் மழைநீர் சேகரிப்புக்காக பண்ணைக் குட்டைகள் அமைத்துத் தரப்படும். தடுப்பு அணைகளும் கட்டப்படவுள்ளது என்றார்.
 கூட்டத்துக்கு, விவசாயிகள் மேம்பாட்டுக் குழுத் தலைவர் கே.பி.முத்துசாமி, செயலாளர் பி.காளீஸ்வரன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை அலுவலர் புனிதா, துணை வேளாண்மை அலுவலர் செல்வம், கார்த்திகேயன் உள்ளிட்ட அலுவலர்கள் திட்டங்கள் குறித்துப் பேசினர்.
கூட்டத்துக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் செய்திருந்தனர். உதவி வேளாண்மை அலுவர் மகாவிஷ்ணு நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com