பவானி, காவிரி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு: நிவாரண முகாம்களில் 6 ஆயிரம் பேர் தஞ்சம்

ஈரோடு மாவட்டத்தில் காவிரி, பவானி ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சார்ந்த

ஈரோடு மாவட்டத்தில் காவிரி, பவானி ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சார்ந்த மக்கள் 6 ஆயிரம் பேர் 60 -க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 
ஈரோடு அருகே கருங்கல்பாளையம், காலிங்கராயன்பாளையம் ஆகிய முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களையும், அப்பகுதியில் வெள்ள பாதிப்புகளையும் ஈரோடு கிழக்குத்தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கே.எஸ்.தென்னரசு முன்னிலையில் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்த பிறகு ஆட்சியர் கூறியதாவது:    
 ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர்  அணையிலிருந்து 70 ஆயிரம்  கன அடி நீரும், மேட்டூர் அணையிலிருந்து 1.75 லட்சம் கன அடியும் நீர் வெளியேற்றப்பட்டு வருவதாலும், பவானி கூடுதுறையில் இவ்விரு ஆறுகளும் இணைவதன் காரணமாகவும் கொடுமுடி வரை 2.25 லட்சம் கன அடி நீர் செல்கிறது.
தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் மேடான பகுதிக்கும், நிவாரண முகாம்களுக்கும் சென்று  பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
மேலும், வெள்ளிக்கிழமை பிற்பகலுக்குப் பின் மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பவானிசாகர் அணை நீரையும் சேர்த்து ஆற்றில் 2.70 லட்சம் கன அடி நீர் செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது. 
 இந்நிலையில், அரசின் உத்தரவுப்படி தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு ஈரோடு மாவட்டத்துக்கு வந்துள்ளது. இக்குழு மொடக்குறிச்சி முதல் கொடுமுடி வரை, பவானி பகுதி, சத்தியமங்கலம் பகுதி என 3 பிரிவுகளாகப் பிரிந்து காவல் துறையினருடன் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபடவுள்ளனர். 2 நாள்கள் முன்னதாகவே 100 வீரர்கள் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் நலன் கருதி ஈரோடு மாவட்டத்தில் 64 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு இம்முகாம்களில் 2 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 6 ஆயிரம் பேர்  பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு, உணவு, குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
 இம்முகாம்களில் உள்ள பொதுமக்களின் அடிப்படை வசதியைக் கண்காணிக்கவும், மேலும் தேவையான முகாம்களை அமைக்கவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய புதிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நிவாரண முகாம்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கண்காணிக்கப்படும். 24 மணி நேரமும் உதவி இயக்குநர் நிலையில் உள்ள அலுவலரின் தலைமையில் இந்த அலுவலகம் இயங்கும். 
தேவை இருப்பின் புதிய முகாம்கள் அமைக்கப்படும். மேலும், நிவாரண முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்கள் கட்டுப்பாட்டு அறையை  0424 - 2253399, 2220999 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். 
 பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த் துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்துத் துறையினரும் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 
அணையின் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது என்றார்.
முன்னதாக, கருங்கல்பாளையம், காலிங்கராயன்பாளையம் ஆகிய முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு ரொட்டி வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com