மாணவர்களின் வருகையைக் கணக்கிட பள்ளிகளில் "ஃபேஸ் ரீடிங்' முறை அறிமுகம்

மாணவர்களின் வருகையைப் பதிவு செய்ய நாட்டில் முதல்முறையாக தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 

மாணவர்களின் வருகையைப் பதிவு செய்ய நாட்டில் முதல்முறையாக தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் "ஃபேஸ் ரீடிங்' (முகப் பதிவு) முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட நம்பியூர் தாலுகாவில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 800 க்கும் மேற்பட்டமேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. கூடக்கரையில் நடைபெற்ற விழாவுக்குப் பின்னர் அமைச்சர் அளித்த பேட்டி:
இந்தியாவிலேயே முதல்முறையாகத் தமிழகத்தில் மாணவர்களின் வருகையை "ஃபேஸ் ரீடிங்' முறையில் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல்கட்டமாக சென்னை, அசோக் நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்த முறை வரும் திங்கள்கிழமை தொடக்கிவைக்கப்படும்.
அரசின் ஆங்கில வழிக் கல்விக்கு பாடப் புத்தகங்கள் காலதாமதமாக விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது. அனைத்துப் பாடப் புத்தகங்களும் குறிப்பிட்டநேரத்தில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஒரே ஒரு பள்ளிக்கு மட்டும் இரண்டு நாள்கள் காலதாமதம் ஆனது. இனிமேல் அதுபோல் நடைபெறாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
புதிய சீருடைகள் தைப்பதில் குளறுபடிகள் நடைபெறுகிறது என்ற குற்றச்சாட்டு கவனத்துக்கு வந்துள்ளது. இதுகுறித்து முதல்வரும்  ஆலோசித்து வருகிறார். விரைவில் மாற்று ஏற்பாடுகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். சென்ற ஆண்டில் 250 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளியாகவும், 200 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு முதல் பள்ளி திறந்த 15 நாள்களுக்குள் மடிக்கணினி, மிதிவண்டிகள் வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com