உயிருக்குப் போராடும் யானைக் குட்டி: தாயின் பாசப் போராட்டம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், காக்கரைக்குட்டை சோளக்காட்டில் உயிருக்குப் போராடும் ஆண் யானைக் குட்டியை காப்பாற்றும்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், காக்கரைக்குட்டை சோளக்காட்டில் உயிருக்குப் போராடும் ஆண் யானைக் குட்டியை காப்பாற்றும் முயற்சியில் தாய் யானை ஈடுபட்ட சம்பவம் கிராம மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
 ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூரை அடுத்த கரளையம், காக்கரைகுட்டை வனப் பகுதியில் இருந்து தீவனம் தேடி மூன்றரை வயதுள்ள ஆண் யானைக் குட்டியுடன் தாய் யானை செவ்வாய்க்கிழமை வந்துள்ளது.
 வனத்தையொட்டி உள்ள ஈஸ்வரன் என்பவரின் சோளக்காட்டில் புகுந்த யானைக் குட்டி  திடீரென மயங்கி விழுந்துள்ளது. அதனால் உடனடியாக எழுந்திருக்க முடியவில்லை. உடன் வந்த தாய் யானை அதைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டது. தாய் யானை, குட்டியைத் தும்பிக்கையால் தூக்கியபடி தள்ளிக் கொண்டு சிறிது தூரம் சென்றது. உயிருக்குப் போராடிய குட்டியைக் காப்பாற்ற தாய் யானை மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காததால் ஆக்ரோஷத்துடன் தாய் யானை பிளிறியது.
 இந்த சப்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து பார்த்தபோது குட்டியுடன் தாய் யானை நிற்பது தெரியவந்தது. இதுகுறித்து சத்தியமங்கலம் வனச் சரக அலுவலர் ஜான்சனுக்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினர் உயிருக்குப் போராடிய குட்டியை மீட்டு சிகிச்சை அளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனால், தாய் யானை அதன் அருகே நின்று கொண்டிருந்ததால் அதனைக் காப்பாற்றும் நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டது.  சிறிது தூரம் சென்றுவிட்டு மீண்டும் குட்டியிருக்கும் இடத்துக்கு தாய் யானை அவ்வப்போது வந்ததால்  குட்டிக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. தாய் யானை 70-க்கும் மேற்பட்ட முறை குட்டியைக் காப்பாற்ற வந்து சென்றது. ஆனால், தாய் யானையின் முயற்சி தோல்வி அடைந்ததால் வனத்துக்குள் செல்வதும், சப்தம் போட்டுக் கொண்டே அங்கேயே உலவுவதுமாகத் திரிந்தது. அவ்வழியாகச் செல்லும் கிராம மக்களையும் துரத்தியது.
 இதனால், வனத் துறையினர் காவல் பணியில் ஈடுபட்டு அவ்வழியாகச் செல்வதற்கு தடை விதித்தனர். நண்பகலில் தாய் யானை காட்டுக்குள் சென்றதால் கால்நடை மருத்துவர் அசோகன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் யானைக் குட்டியை மீட்டு சிகிச்சை அளித்தனர். யானைக் குட்டியைப் பரிசோதனை செய்ததில் அதன் பற்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதும், அதனால்  சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டதும் தெரியவந்தது.
 இதையடுத்து, குளுக்கோஸ் மூலம் யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது நேரம் எழுந்து நின்ற யானை மீண்டும் படுத்துவிட்டது. யானையைக் காப்பாற்றும் முயற்சியில் வனத் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com