மாவட்டத்தில் இதுவரை  140 டன் நெல் கொள்முதல்

ஈரோடு மாவட்டத்தில் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டது முதல்  இதுவரை 140 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டது முதல்  இதுவரை 140 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் நன்செய் சாகுபடிக்காக பவானிசாகர் அணையில் இருந்து அக்டோபர் 2-ஆம்  தேதி முதல் பாசனத்துக்கு தண்ணீர்த் திறக்கப்பட்டு பிப்ரவரி 2-ஆம் தேதியுடன் நிறுத்தப்பட்டது. 
கீழ்பவானி, காலிங்கராயன், கொடிவேரி வாய்க்கால் பாசனப் பகுதிகளில் சுமார் 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக மூன்று பாசனப் பகுதிகளிலும் நெல் அறுவடையாகும் போது அரசு சார்பில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள் முதல் செய்யப்படும்.
நடப்பு ஆண்டில் மாவட்டத்தில் 16 நெல் கொள்முதல் மையங்கள் திறக்க மாவட்ட நிர்வாகம் தீர்மானித்தது. அதில், முதல்கட்டமாக பிப்ரவரி 8-ஆம் தேதி காசிபாளையம், அத்தாணி, ஏளூர், கள்ளிப்பட்டி, என்.ஜி.பாளையம், புதுவள்ளியம்பாளையம், டி.என்.பாளையம் ஆகிய 7 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, கீழ்பவானி பாசனத்துக்கு உள்பட்ட அவல்பூந்துறை, கே.ஜி.வலசு, எழுமாத்தூர், பி.மேட்டுப்பாளையம், பெரியபுலியூர் ஆகிய பகுதிகளிலும், கொடிவேரி பாசனத்தில் புதுக்கரைபுதூர், கூகலூர் ஆகிய 7 இடங்களிலும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 
இந்நிலையில், கரட்டடிபாளையம், உக்கரம் ஆகிய 2 இடங்களில்  நெல் கொள்முதல் நிலையங்கள் புதன்கிழமை திறக்கப்பட்டது உள்பட  ஈரோடு மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 16 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு  வருகிறது. 
சன்ன நெல் ரகத்துக்கு 1 கிலோவுக்கு ரூ. 16.60, மோட்டா ரக நெல் ரூ. 16 என விலை நிர்ணயித்து  கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான  தொகை  மின்னணு பரிவர்த்தனை  மூலம் விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாக மாவட்டம் முழுவதும் திறக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக 45 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அதற்கு 
பிறகு கடந்த 2 ஆண்டுகளாக கடுமையான வறட்சியால் நெல் சாகுபடி செய்யப்படவில்லை. இந்த ஆண்டு ஓரளவுக்குப் பருவ மழையும், பவானிசாகர் அணை நீரும் விவசாயிகளுக்கு உதவி செய்ததால் நடப்பு ஆண்டில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல்லை அரசு கொள்முதல் செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில்  கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக 140 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com