"கற்ற கல்வியை சமூகத்துக்குப் பயன்படுத்துவது மாணவர்களின் கடமை'

கற்ற கல்வியை சமூகத்துக்குப் பயன்படுத்த வேண்டிய கடமையை மாணவர்கள் மறந்துவிடக் கூடாது என்று ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் கூறினார்.

கற்ற கல்வியை சமூகத்துக்குப் பயன்படுத்த வேண்டிய கடமையை மாணவர்கள் மறந்துவிடக் கூடாது என்று ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் கூறினார்.
 ஈரோடு வாசவி கல்லூரியில் மாணவர் பேரவை சார்பில் முதல்வர் ந.ஜெயகுமார் தலைமையில்  செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவர் பேசியதாவது:
 கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்ற மாணவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பு மக்கள் சமூகத்தின் பங்களிப்பால்தான் கிடைத்தது என்பதை உணந்து அவர்களுக்குக் கடமையாற்ற முன் வர வேண்டும். பெரும் பணக்காரர்கள், தொழில் அதிபர்கள் மட்டும் வருமான வரி, விற்பனை வரி கட்டுவதில்லை. வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கிற ஏழை எளிய மக்களும் இரவு, பகல் நேரம் கருதாமல் உழைக்கின்ற தொழிலாளர்களும், காடுகளில் கழனிகளில் பாடுபடுகின்ற உழவர்களும் விவசாயக் கூலிகளும்கூட கண்ணுக்குத்  தெரியாத வரியைச் செலுத்தி வருகிறார்கள்.
தெரிந்தும் தெரியாமலும் செலுத்தக் கூடிய வரியினங்கள் அரசின் கருவூலத்துக்குச் சென்ற பிறகு, பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு வந்து சேர்கிறது. இங்கிருந்து ஒதுக்கப்படும் தொகை கல்லூரிக் கட்டடங்களாகவும், ஆய்வுக் கூடங்களாகவும், ஆசிரியர்களுக்கு ஊதியங்களாகவும்  உருமாறுகின்றன. அரசுக் கல்லூரிகளும் அரசு உதவி பெறும் கல்லூரிகளும் இந்த அடிப்படையில்தான்   இயங்கி வருகின்றன.
 எத்தனையோ  பேருக்குக்  கிடைக்காத  கல்லூரிப்  படிப்புக்கான வாய்ப்பு தங்களுக்கு கிடைத்திருப்பதை எண்ணிப் பார்த்து பாடங்களைப் படிப்பதில் மாணவர்கள் அக்கறையுடன் தீவிர   கவனம் செலுத்த வேண்டும். படித்து முடித்துப்  பட்டம் பெற்ற பிறகு, தாங்கள் பெற்ற கல்வி சமுதாயத்தின் பங்களிப்பால்தான் சாத்தியமாகியிருக்கிறது என்ற உண்மையை மறந்துவிடாமல் கல்வி வாய்ப்புக் கிடைக்காத எத்தனையோ உழைக்கும் மக்களின் குழந்தைகளுக்கு தங்களைப்போல் கல்வி வாய்ப்பைப் பெற்றுத் தரும் கடமையைச் செய்ய முன்வர வேண்டும். ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் கல்வி குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
 இதில், பேரவைத் தலைவர் எம்.ஹரீஷ் வரவேற்றார். ஆங்கிலத் துறைத் தலைவர் கே.எஸ். சாரதாம்பாள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். கணினித் துறைத் தலைவர் கே. ராஜகோபால் கெளரவித்தார். மாணவர் பேரவைச் செயலர் டி.பசுபதி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com