உளுந்து மகசூலில் கோபி விவசாயி சாதனை

உளுந்து மகசூலில் சாதனை படைத்த  கோபி விவசாயிக்குப் பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உளுந்து மகசூலில் சாதனை படைத்த  கோபி விவசாயிக்குப் பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம்,  கோபிசெட்டிபாளையம்,  நஞ்சகவுண்டன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முன்னோடி விவசாயி என்.கே.பிரகாசம். 
கடந்த பருவத்தில் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனப் பகுதியில் 2 ஆண்டுகளாக வறட்சி நிலவியபோது விவசாயி பிரகாசம் பாரியூர் கரை கிராமத்தில் உள்ள தனது வயலில் வேளாண்மைத் துறை அலுவலர்களின் பரிந்துரையின் அடிப்படையில்  முதன்முதலாக வம்பன்-6 என்ற புதிய ரக  உளுந்தை சாகுபடி செய்துள்ளார். 
தனது வயலில் உள்ள ஆழ்துளைக் கிணறு மூலம் ஆயில் என்ஜின் வைத்து பாசனம் செய்து ஒன்றேகால் ஏக்கரில் 912 கிலோ (ஏக்கருக்கு 730 கிலோ) உளுந்து மகசூல் எடுத்துள்ளார். இதில் 672 கிலோவை கோபி வட்டார வேளாண்துறைக்கு விதைக்கொள்முதலுக்குக் கொடுத்ததன் மூலமும்,  மீதியை வெளிச் சந்தையில் விற்றதன் மூலமும் அவருக்கு ரூ. 87 ஆயிரம் கிடைத்துள்ளது. இதில் நிகர லாபமாக ரூ. 53 ஆயிரம் பெற்றுள்ளார்.
ஆயக்கட்டுப் பகுதியில் தண்ணீர் திறந்து விடப்படாத நிலையில் சமயோசிதமாக செயல்பட்டு உளுந்து பயிரிட்டு 80 நாளில் குறைந்த தண்ணீரில் நவீன தொழில்நுட்பங்களைக் கடைப்பிடித்து கணிசமான வருமானம் ஈட்டிய விவசாயி பிரகாசத்துக்கு கோபி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
கீழ்பவானிப் பாசன சங்கம் மற்றும் ஈரோடு மாவட்ட உழவர் விவாதக் குழு ஆகிய அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில், கோபி வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி உளுந்து சாகுபடியில் நவீன உத்திகள் குறித்துப் பேசினார்.
கீழ்பவானி முறைப் பாசன சங்க இணைச் செயலாளர் பா.மா.வெங்கடாசலபதி,  கரும்பு வளர்ப்போர் சங்கத் தலைவர் சென்னியப்பன்,  உழவர் விவாதக் குழு அமைப்பாளர் பழனிசாமி உள்ளிட்டோர் பாராட்டிப் பேசினர்.
இதைத் தொடர்ந்து, விவசாயி பிரகாசம் தான் அதிக மகசூல் எடுப்பதற்காக மேற்கொண்ட முயற்சிகளையும்,  அதன் அனுபவத்தையும் விளக்கிக் கூறினார்.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோபி வட்டார வேளாண்மைத் துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com