காவிரி இறுதித் தீர்ப்பால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறையும் அபாயம்: விவசாயிகள் அச்சம்

காவிரி நீர்ப் பங்கீடு பிரச்னை தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இறுதித் தீர்ப்பின் காரணமாக பவானிசாகர் அணைக்கு  நீர் வரத்து குறையும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

காவிரி நீர்ப் பங்கீடு பிரச்னை தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இறுதித் தீர்ப்பின் காரணமாக பவானிசாகர் அணைக்கு  நீர் வரத்து குறையும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் சங்கச் செயலர் கீ.வடிவேல் வெளியிட்ட அறிக்கை:
காவிரி இடைக்காலத் தீர்ப்பில்  தமிழகத்துக்கு 205 டி.எம்.சி.  நீரும், இறுதித் தீர்ப்பில் 192 டி.எம்.சி. நீரும், மேல் முறையீட்டு தீர்ப்பில் 177.25 டி.எம்.சி. எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 14.75 டி.எம்.சி. நீர் குறைக்கப்பட்டுள்ளது. இந்த அளவு நீர் எந்தெந்த மாதங்களில் குறைக்கப்படும் என்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. இத் தீர்ப்பில், டெல்டா பகுதியின் நிலத்தடி நீர் 10 டி.எம்.சி. என கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. அதுபோல, பவானிசாகர் அணைக்கு வரும் கூடுதல் நீரையும் கணக்கிட வாய்ப்புள்ளது.
 பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு முன்பு 36 டி.எம்.சி. ஆகவும், தற்போது 28 டி.எம்.சி. ஆகவும், காளிங்கராயன் மற்றும் தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்துக்கு முன்பு 22 டி.எம்.சி. ஆகவும், தற்போது 8.5 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. பற்றாக் குறை காலத்தில் இந்த விகிதத்தில் நீர் பங்கிடப்படும்.
கூடுதல் நீர்வரத்தின்போது, மீதமுள்ள நீர் பவானி ஆற்றின் வழியாக காவிரியில் விடப்பட வேண்டும் என காவிரி இறுதித் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல்முறையீட்டுத் தீர்ப்பின்படி, கீழ்பவானி மற்றும் காளிங்கராயன், தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்துக்கான நீரின் அளவு மேலும் குறைக்க வாய்ப்புள்ளது. தற்போது, கீழ்பவானியில் நஞ்சைக்கு  19 டி.எம்.சி.யும், புஞ்சைக்கு  9 டி.எம்.சி. என 28 டி.எம்.சி அளவு  திறக்கப்படுகிறது. 
   ஒருவேளை நீர்பங்கீடு குறைந்தால், கீழ்பவானி வாய்க்காலில் இருபுறச் சுவர்களையும் கான்கிரீட் தளம் அமைத்து  தரைப் பகுதியை கான்கிரீட் அமைக்காமல் விட்டுவிட வேண்டும். இதனால் நீர் வீணாவது குறையும்.
இதன் மூலம், தற்போது 2 ஆயிரத்து 300 கனஅடி திறப்புக்குப் பதில்  யிரத்து 900 கனஅடி திறந்தால் போதும். 400 கனஅடி நீர் மிச்சமாகும். இது தவிர, கரைப் பகுதியின் இரு புறங்களிலும் வீணாகும் நீரைச் சேமிக்கலாம். அதே நேரம்  இம் மாவட்டத்தில் உள்ள 36 கசிவு நீர் குட்டை மற்றும் அதன் மூலம் பாசனம் பெறும் 17 ஆயிரம் ஏக்கருக்கு  மழை நீரின் மூலம்  வழக்கம்போல நீர் கிடைக்கும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து காவிரிக்கான நீரை ஒழுங்குபடுத்தும்போது பவானிசாகர் அணையின் நீர் பங்கீட்டை மாற்றி அமைக்க வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அதை எதிர்கொள்ள  விவசாயிகள் தயாராக வேண்டிய நிலை உருவாகி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com