கொடுமுடி அருகே வீட்டில் நுழைந்து பெண்ணிடம் நகைப் பறிப்பு

கொடுமுடி அருகே  மர்மநபர்கள் புதன்கிழமை இரவு வீட்டில் புகுந்து பெண்ணிடம் நகையைப் பறித்தனர்.

கொடுமுடி அருகே  மர்மநபர்கள் புதன்கிழமை இரவு வீட்டில் புகுந்து பெண்ணிடம் நகையைப் பறித்தனர்.
கொடுமுடி அருகே உள்ள வடக்கு புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் சுந்தரம் (60).  இவரது மனைவி சாந்தாமணி (48).   இவர்களது மகள்கள் சவுமியா (20), விகாசினி (12).  
இந்நிலையில் அனைவரும்  வீட்டின் அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
நள்ளிரவு 1 மணியளவில் வீட்டின் பின்புறம் உள்ள மதில் சுவரைத் தாண்டி வந்த மர்மநபர்கள், பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர், அறையில் உள்ள பீரோவை உடைக்க முயன்றுள்ளனர். ஆனால்  
முடியவில்லை.  இந்த சப்தம் கேட்டு சாந்தாமணி வெளியே வந்தார். சுந்தரமும் பின்தொடர்ந்து வந்துள்ளார். அப்போது, முகமூடி அணிந்தபடி இருவரில் ஒருவர் சாந்தாமணியை அரிவாளைக் காட்டி மிரட்டி  அவரது கழுத்தில் இருந்த நகையைப் பறிக்க முயன்றார்.  இதை சுந்தரம் தடுக்க முயன்றார். அதற்குள் மர்மநபர்கள் அரிவாளை அவர் மீது வீசிவிட்டு  சாந்தாமணி கழுத்தில் இருந்த 7 பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு  ஓடினர்.  இருவரும் கூச்சலிட்டதும் அங்கிருந்தவர்கள் ஓடிவந்தனர். அதற்குள் மர்மநபர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.
மற்றொரு சம்பவம்:  விருப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் கணபதி. இவருக்குச் சொந்தமாக அங்கு அரிசி ஆலை உள்ளது.  இந்நிலையில் சுந்தரம் வீட்டில் திருடிவிட்டு தப்பிவந்த மர்மநபர்கள்,  ஆலையின் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செந்தில் என்பவரின் இருசக்கர மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு  வெளியே வந்தனர். அப்போது, அதைப் பார்த்த கணபதியின் தம்பி பழனிச்சாமி (58)  மனைவி ஜோதிமணி  சப்தம் போட்டார்.  இதையறிந்த பழனிச்சாமி அங்கு வந்ததும் மர்மநபர்கள், மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.  இச் சம்பவம் குறித்து கொடுமுடி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பெருந்துறை டி.எஸ்.பி. முருகன் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com