ஈரோட்டில் பேருந்துகள் இயக்கம் தொடக்கம்: பொதுமக்கள் மகிழ்ச்சி

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வியாழக்கிழமை இரவு வாபஸ் பெறப்பட்டதையடுத்து

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வியாழக்கிழமை இரவு வாபஸ் பெறப்பட்டதையடுத்து வெள்ளிக்கிழமை காலையிலிருந்து  பேருந்து போக்குவரத்து தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
 அரசு துறை ஓட்டுநர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பணிக்கொடையை உடனே வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சேவை நோக்கோடு செயல்படும் 
போக்குவரத்துத் துறையில் ஏற்படும் நஷ்டத்தை அரசே ஏற்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8 நாள்களாக  நடைபெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர்களின் போராட்டம் ஜனவரி 11-ஆம் தேதி இரவு வரை நீடித்தது.
 வழக்கம்போல பொங்கல் பண்டிகைக்காக சொந்த கிராமங்களுக்குச் செல்ல 
வேண்டிய தொழிலாளர்கள், பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் ஜனவரி 12, 13 ஆகிய 2 நாள்களில் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டு ஈரோடு மாவட்டம் உள்பட   தமிழகம் முழுவதும் சுமார் 64 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருந்தனர்.
 இந்நிலையில், வேலைநிறுத்தம் 8 நாள்கள் நீடித்ததால் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இதையடுத்து, வேலை நிறுத்தம் தொடரும் என்ற அச்சம் காரணமாக  
ஜனவரி 10, 11 ஆகிய இரு நாள்களில் வாடகை கார்களிலும், சுற்றுலா வேன்களிலும் ஈரோட்டிலிருந்து  மதுரை,  நெல்லை, திருச்சி, புதுக்கோட்டை,  தஞ்சை,சென்னை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு குழுக்களாகப் பயணம் மேற்கொள்ள நேரிட்டது. மேலும், தனியார் பேருந்துகளிலும் பல மடங்கு கட்டணம் செலுத்திச் சென்றனர். 
 இந்நிலையில், வியாழக்கிழமை இரவில் நீதிமன்றத்தில் நடைபெற்ற பல்வேறு 
விசாரணைகள், வாதப் பிரதிவாதங்களையடுத்து தொழிலாளர்களுக்கு கிடைத்த சில உறுதியான வாக்குறுதிகளின் அடிப்படையில் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 
இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை அதிகாலையிலிருந்து பேருந்துகள் இயங்கியதால் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியது.  ஈரோடு மண்டலத்தில் உள்ள ஈரோடு, பவானி, அந்தியூர், பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம் உள்பட 12 பணிமனைகள் மூலம் 835 அரசுப் பேருந்துகளும்  இயக்கப்பட்டதால் ஈரோடு பேருந்து நிலையம் களைகட்டியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com