திம்பம் மலைப் பாதையில் விபத்துகளைத் தடுக்க குவிலென்ஸ் பொருத்தப்படும்: மாவட்ட எஸ்.பி. தகவல்

திம்பம் பள்ளத்தாக்கு மலைப் பாதையில் நேரிடும் விபத்துகளைத் தடுக்கும் வகையில் முக்கியமான 12 கொண்டை ஊசி வளைவுகளில்

திம்பம் பள்ளத்தாக்கு மலைப் பாதையில் நேரிடும் விபத்துகளைத் தடுக்கும் வகையில் முக்கியமான 12 கொண்டை ஊசி வளைவுகளில் குவி லென்ஸ் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.சிவகுமார் கூறினார்.
 ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் திண்டல் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற சாலைப் 
 பாதுகாப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கில், சாலைப் பாதுகாப்பு குறித்த கவிதையின் குறுந்தகடை வெளியிட்டு அவர் பேசியதாவது:
 சாலை பாதுகாப்பை வலியுறுத்தி பள்ளிகள், கல்லூரிகளில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி நடத்தப்பட்ட பொருள்காட்சி, கண்காட்சிகள் மாணவர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மாவட்ட அளவில் விபத்துகளைத் தடுப்பதற்காக தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். ஈரோடு - நசியனூர் சாலை, சத்தி சாலை, பவானி சாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிக விபத்து நடைபெறும் இடங்களைக் கண்டறிந்து அங்கு வேகத்தடை அமைப்பதற்குப் பரிந்துரை செய்துள்ளோம்.  
 பெருந்துறையில் இருந்து தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்லும் பெத்தாம்பாளையம் சாலை, துடுப்பதி சாலை, காஞ்சிகோவில் சாலை ஆகிய பகுதிகளில் உயர் கோபுர விளக்குகள் (ஹைமாஸ்) பொருத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 
திம்பம் பள்ளத்தாக்கு சாலையில் அமைந்துள்ள 27 கொண்டை ஊசி வளைவுகளில் அடிக்கடி விபத்து ஏற்படக்கூடிய 12 கொண்டை ஊசி வளைவில் கன்வே லென்ஸ் (குவிலென்ஸ் கண்ணாடி) பொருத்தப்படும். இதன் மூலம் எதிரே வளைவுகளில் வரும் வாகனத்தை எளிதாக அறிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் விபத்தைத் தவிர்த்து வாகனங்களை இயக்க முடியும்  என்றார்.
 இந்நிகழ்ச்சியில், நகரப் போக்குவரத்து துணைக் கண்காணிப்பாளர் சேகர் வரவேற்றார். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த குறுந்தகடை ஜேசீஸ் முன்னாள் தேசிய தலைவர் முத்துசுவாமி வெளியிட வேளாளர் கல்லூரித் தாளாளர் சந்திரசேகர் பெற்றுக் கொண்டார்.
 தொடர்ந்து, பொங்கல் பண்டிகையையொட்டி மாவட்ட எஸ்.பி. சிவகுமார் எழுதிய கவிதை பாடல் குறுந்தகடை மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வெளியிட சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் துரைசாமி அதைப் பெற்றுக் கொண்டார். சாலை பாதுகாப்பு குறித்து மாணவ, மாணவிகளின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com