மீன்பிடிப்புத் தொழில் பாதிப்பு: சுண்டைக்காய் வற்றல் தயாரிப்பில் ஈடுபடும் மீனவர்கள்

வேகமாக நிரம்பும் பவானிசாகர் அணையில் நீர்மட்டம் 103 அடியாக உயர்ந்துள்ளதால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

வேகமாக நிரம்பும் பவானிசாகர் அணையில் நீர்மட்டம் 103 அடியாக உயர்ந்துள்ளதால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் மாற்றுத்தொழிலான சுண்டைக்காய் வற்றல் தயாரிக்கும்  பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக பில்லூர் அணை நிரம்பியுள்ளது.  இதிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் பவானிசாகர் அணைக்கு வந்து சேருவதால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்தது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி  அணையின் நீர்மட்டம் 103 அடியை எட்டியுள்ளது.  அதாவது நீர்இருப்பு 20.41 டிஎம்சி ஆக உள்ளது.  அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக தொடர்ந்து நீடிக்கிறது.  அணையில் இருந்து 1000 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.  அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து வந்துள்ளதால்  அணைப் பகுதியில் 30 சதுர கிலோ மீட்டர் தூரம் வரை நீர் தேங்கி நிற்கிறது. நீர்வரத்து காரணமாக மீன்பிடிப்புத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.  அணை நீர்த்தேக்கப் பகுதியில் அமைந்துள்ள சித்தன்குட்டை, ஜெஜெ நகர், காக்கராமொக்கை, அய்யம்பாளையம் பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட மீன்வர்கள் அணையில் மீன் பிடிக்க செல்லவில்லை. 
தினந்தோறும் 50 கிலோ வரை மீன் பிடித்து வந்த மீனவர்களுக்கு 2 முதல் 5 கிலோ மட்டுமே கிடைப்பதால் கட்டுப்படியான கூலி கிடைக்கவில்லை எனக் கவலை அடைந்துள்ளனர். இதனால் பரிசல்கள், மீன்வலைகள் நீர்ப்பிடிப்பு பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.  தற்போது புதிதாக லட்சணக்கான மீன் குஞ்சுகள் அணையில் விடப்பட்டு வளர்க்கப்படுவதாலும், மீன் பிடிப்பு மேலும் தாமதமாகும் நிலை உள்ளது.  இந்நிலையில், தற்போது மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டதால் மீனவர்கள் சுண்டைக்காய் சேகரித்து வற்றல் தயாரிக்கும் மாற்றுத் தொழிலுக்கு மாறியுள்ளனர்.  அணையை ஒட்டியுள்ள வனத்தில் சுண்டைக்காய் சேகரித்து அதன் விதைகளை அப்புறப்படுத்தி உலர வைத்து வற்றலாக  விற்கின்றனர். இதனால் தினந்தோறும் ரூ. 200 முதல் ரூ.300 வரை வருவாய் கிடைப்பதால் மீன் பிடிப்புக்கான இயல்பு நிலை திரும்பும் வரை சுண்டைக்காய் வற்றல் பணியைத் தொடருவதாக தெரிவித்தனர். கிராமத்து வீதியில் ஆங்காங்கே பெண்கள் குடும்பம் சகிதமாக சுண்டைக்காய் வற்றல் பணியில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது  அணைப் பகுதியில் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் பரிசலில் சென்று சுண்டைக்காய் சேகரித்து மீண்டும்  ஊர் திரும்புகின்றனர். சுண்டைக்காய் சேகரிக்கக்கூடாது என வனத் துறையினர் மிரட்டுவதாகத் தெரிவித்தனர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com