சத்தியமங்கலம் அருகே  கிராமத்துக்குள் புகுந்த யானை தாக்கி மூதாட்டி படுகாயம்: 5 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் வனத்துக்குள் விரட்டியடிப்பு

சத்தியமங்கலம் அருகே கிராமத்துக்குள் புகுந்த யானை, அதிகாலை அவ்வழியாகச் சென்ற மூதாட்டியை தாக்கியது. 

சத்தியமங்கலம் அருகே கிராமத்துக்குள் புகுந்த யானை, அதிகாலை அவ்வழியாகச் சென்ற மூதாட்டியை தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். கிராம மக்கள், வனத் துறையினர், போலீஸார் ஆகியோர் 5 மணி நேரம் போராடி யானையை வனப் பகுதிக்குள் விரட்டினர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் வனத்தையொட்டி உள்ள தொண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குருநாதி (60). இவர் திங்கள்கிழமை காலை 5.45 மணிக்கு வீட்டில் இருந்து பேருந்து நிலையத்துக்குப் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது வனத்தில் இருந்து வெளியேறிய 3 வயதுள்ள பெண் யானை, வழிதவறி, கடம்பூர் குடியிருப்பைத் தாண்டி பேருந்து நிலையப் பகுதியில் முகாமிட்டிருந்தது. இதையறியாத குருநாதி அவ்வழியாக சென்றபோது அந்தக் காட்டு யானை தாக்கியதில் படுகாயம் அடைந்தார். 
யானையின் பிளிறல் சப்தம் கேட்டு அங்கிருந்த கிராம மக்கள் குருநாதியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 
இதற்கிடையே ஊருக்குள் புகுந்த காட்டு யானையை விரட்டும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டனர். பேருந்து நிலையத்தில் இருந்து காட்டு வழியாக தொண்டூர் கிராமத்துக்குள் புகுந்த யானையை கிராம மக்கள் துரத்தினர். அப்போது யானை வேகமாக ஓடியபோது  சாலையில் இருந்த குழியில் தடுக்கி விழுந்தது. இதனால் காலில் காயம் ஏற்பட்டதால் அதே இடத்தில் படுத்துக்கொண்டது. 
இதையடுத்து பொக்லைன் இயந்திரம் மூலம் யானையைத் தூக்கி காட்டுக்குள் விரட்டினர். அங்கிருந்து சென்ற யானை செங்காடு வழியாக பவளக்குட்டை பள்ளத்தில் அடர்ந்த புதர்மறைவில் பதுங்கியது. நீண்ட நேரமாகியும் யானை அங்கிருந்த வெளியே வராததால் பட்டாசு வெடித்து விரட்ட முயன்றனர். ஆனால் அது வெளியே வரவில்லை. இதனால் ஆம்புலன்ஸ் சைரன் சப்தம் எழுப்பி யானையைக் காட்டுக்குள் விரட்டும் பணி தொடர்ந்தது. 
இதற்கிடையே மயக்க மருந்து செலுத்தி யானையைப் பிடிக்கும் முயற்சியில் கால்நடை மருத்துவர் அசோகன் தலைமையிலான மருத்துவக் குழு முயற்சி எடுத்தது. ஆனால், யானை சோர்வுடன் காணப்பட்டதால் அந்த முயற்சியும் கைவிடப்பட்டது. நீண்டநேரம் கழித்து புதர்மறைவில் இருந்து வெளியே வந்த யானையை வனத்துக்குள் விரட்டும் பணியில் கடம்பூர் கிராம மக்கள், வனத் துறையினர், போலீஸார் ஆகியோர் ஈடுபட்டனர். இதையடுத்து 5 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் பவளக்குட்டை மேடு வழியாக அந்த யானை வனத்துக்குள் சென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com