காவிரி விவகாரம்: எம்.பி.க்கள் ராஜிநாமா செய்ய வேண்டும்: கமல்ஹாசன்

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜிநாமா செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்

ஈரோடு: காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜிநாமா செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தினார். 
 திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
 எனது சினிமா புகழ் அரசியல் வளர்ச்சிக்கு உதவும் என்றாலும் மக்களின் அன்பும், எங்களின் நேர்மையும் இருந்தால்தான் அரசியலில் வளர்ச்சி அடைய முடியும். தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். மக்களுக்குப் பின்னால் நான் இருப்பதால் நானும் மாற்றத்தை எதிர்பார்க்கிறேன்.
 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை மன்னித்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருப்பது அவரது மனிதநேயத்தைக் காட்டுகிறது. அதே நேரத்தில் ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை மன்னித்து விடுதலை செய்யும் வகையில் சட்டத் தளர்வு ஏற்படுத்த வேண்டும். 
 தமிழக அமைச்சர்கள் குறித்து நான் நேர்மையான முறையில் விமர்சனம் செய்ததால் என்னைப் பற்றி அவர்கள் விமர்சனம் செய்வது இயல்பு.
 காவிரி மேலாண்மை விவகாரத்தில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜிநாமா செய்ய வேண்டும்.  அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து மூன்றாவது தலைமுறையாகத் தற்போதும் கோரிக்கை வைத்துப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பேன். 
 கிறிஸ்தவ மிஷினரிகளிடம் இருந்து நிதி பெறுவதாக கூறுவது நகைப்பை வரவழைக்கிறது.  பெரியார் இல்லத்துக்குச் சென்றது எனது தந்தை வீட்டுக்குச்  சென்றது போன்றதாகும்.  என்னை அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சினிமாக்காரன் என்பதாலும் என்னைப் பார்க்க கூட்டம் சேருகிறது.
பெண்களுக்கு எதிராகத் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருவது வருத்தமளிக்கிறது.  பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. நடவடிக்கையால் எவ்விதப் பயனும் இல்லை.
சிலை வைப்பது என்பதில் மாற்றுக் கருத்து கொண்டவன் நான். ஒருவருக்கு மதிப்பளித்து அவருக்கு சிலை வைத்து சிலர் பூஜித்து வருகின்றனர். அதனை உடைப்பது என்பது கேவலமான செயல். பெரியார் உயிரோடு இருந்தால் எனக்கு ஏன் சிலை வைத்தீர்கள் என கேள்வி கேட்டு இருப்பார். 
 காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள காலக்கெடுவை ஞாபகம் வைத்து மத்திய அரசைக் கேள்வி கேட்போம் என்பதால்தான் தற்போது சில நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இந்த  விவகாரத்தில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றார்.  
பெரியார் இல்லத்தில் கமல்ஹாசன்: ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கமல்ஹாசன் பெரியார் நினைவு இல்லத்துக்கு நேரில் சென்றார். அங்கு பெரியார் பயன்படுத்திய பொருள்கள் மற்றும் அவரது புகைப்படங்களை நேரில் பார்வையிட்டார். ராமேசுவரத்தில் நடைபெற்ற கட்சி தொடக்க விழாவின்போது அப்துல் கலாம் பயின்ற பள்ளிக்குச்  செல்ல அனுமதி மறுக்கப்பட்டது வேதனை அளித்தாலும், தற்போது அதற்கு மாற்றாக மற்றொரு பள்ளியான பெரியார் இல்லத்துக்குச் சென்றது மகிழ்ச்சி அளித்தது என்றார். 
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை காலை சுற்றுப்பயணம் தொடங்கிய கமல்ஹாசன், வீரப்பன்சத்திரம், சித்தோடு, கவுந்தப்பாடி, கோபி, சத்தியமங்கலம், டி.ஜி.புதூர், டி.என்.பாளையம், அத்தாணி, அந்தியூர், பருவாச்சி, பவானி ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று மக்களை சந்தித்தார்.
  அப்போது, அந்தந்த பகுதி நிர்வாகிகளை அழைத்து கட்சிக் கொடியை ஏற்றச் சொல்லி கூட்டங்களில் அவர் பேசியதாவது:
 தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என தாய்மார்கள் எதிர்பார்க்கிறார்கள். அதனை ஒரே இரவில் கொண்டுவர முடியாது. படிப்படியாகத்தான் அமல்படுத்த முடியும்.
 நெசவுத் தொழில் நசிந்து வருகிறது. எனவே, இளைஞர்கள் நெசவுத் தொழிலில் ஈடுபட முன்வர வேண்டும். விவசாயிகள் மழையை எதிர்பார்த்து நிலத்தில் கால் வைக்கத் தயங்குகிறார்கள். அதைவிட,  விவசாய நிலத்தில் இளைஞர்கள் கால் வைக்க வேண்டும் என்பதே முக்கியமானது. அப்போதுதான் விவசாயம் செழிக்கும். 
  பவானி ஆறு மாசடைந்து காணப்படுகிறது. இந்த ஆற்றை அரசு சுத்தப்படுத்த வேண்டும். இல்லையென்றால் எந்த அரசாக இருந்தாலும் பவானி ஆற்றை நாம் பழைய நிலைக்கு கொண்டு வர வைப்போம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com