பன்றிக் காய்ச்சல்: கோவையில் 3 பேர் சாவு

கோவையில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். 

கோவையில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். 
 கோவை, காந்தி மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவசக்தி. இவரது மனைவி காயத்ரி (28). 
இவர், கடந்த சில தினங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இந்நிலையில், அவரது உடல் நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தனி வார்டில் வைத்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
கோவை மாவட்டம், சூலூர் பகத் சிங் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சூலூர், திருச்சி சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி புஷ்பா (38). இவர்களுக்கு 19, 11 வயதில் மகள்கள் உள்ளனர். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக புஷ்பா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இந்நிலையில், அவரது உடல் நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். 
 கோவை, ராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (37). இவருக்கு கடந்த சில நாள்களாக காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதையடுத்து, அருகில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் அவருக்குப் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. ஆனால், வீட்டில் இருந்தவாறே சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
கோவை மாவட்டத்தில் கடந்த 16 நாள்களில் டெங்கு, பன்றி மற்றும் வைரஸ் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 44 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலுக்கு 24 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 62 பேரும் என மொத்தம் 86 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com