சுகாதாரக் கேடு: 167 நிறுவனங்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை

ஈரோடு மாநகராட்சியில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது சுகாதார பராமரிப்பில்லாதது கண்டுபிடிக்கப்பட்டு

ஈரோடு மாநகராட்சியில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது சுகாதார பராமரிப்பில்லாதது கண்டுபிடிக்கப்பட்டு கடந்த 2 மாதங்களில் இதுவரை 167 நிறுவனங்களுக்கு எச்சரிக்கைக் கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக ஆணையர் மு.சீனிஅஜ்மல்கான் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் மாவட்ட ஆட்சியர்  சி.கதிரவன், மாநகராட்சி ஆணையர் மு. சீனிஅஜ்மல்கான், மாநகர் நல அலுவலர் டாக்டர் சுமதி  உள்ளிட்டோர் பல்வேறு இடங்களில் தொடர் ஆய்வு நடத்தி வருகின்றனர். அப்போது, கொசு உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறத்தை சுகாதாரமற்ற முறையில் வைத்திருப்பவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர்.
இதுகுறித்து, மாநகராட்சி ஆணையர் மு.சீனி அஜ்மல்கான் கூறியதாவது:
ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக மண்டலத்துக்கு 75 பணியாளர்கள் வீதம் மொத்தம் 300 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று கொசுப் புழு உற்பத்தியாகும் வகையில் மழைநீர் தேங்கி நிற்பது குறித்தும், ஏ.சி., ஃபிரிட்ஜில் தண்ணீர் தேங்கி நிற்பது குறித்தும் கள ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், வீடுகளில் பயன்படுத்தப்படும் தண்ணீரில் அபேட் மருந்து ஊற்றப்படுகிறது. இதேபோல், சாக்கடையிலும் கொசு மருந்து அடிக்கப்படுகிறது.
அரசு, தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்புடன் அனுமதிக்கப்படும் நோயாளிகள் விவரம் தினமும் சேகரிக்கப்படுகிறது. அதன் மூலம் நோயாளிகள் வசிக்கும் பகுதிகளுக்கு சுகாதாரப் பணியாளர்கள் சென்று சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர். ஈரோட்டில் டெங்கு பாதிப்பு குறைவாக இருக்கிறது. ஆனால், வைரஸ் காய்ச்சல் பரவலாகக் காணப்படுகிறது. இதைத் தடுக்க பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மாநகராட்சியின் சித்த மருத்துவப் பிரிவு சார்பில் நிலவேம்புக் குடிநீர் தயாரிக்கப்பட்டு அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. 
பன்றிக் காய்ச்சல் பாதிப்பைத் தடுக்க பொதுமக்கள் அதிகமாகக் கூடும் பகுதிகளான பேருந்து நிலையம், ரயில் நிலையம், மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் லைசால் என்கிற மருந்து தெளிக்கப்படுகிறது. இதன் மூலம் காற்றில் பரவும் வைரஸ் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும், பொதுமக்கள் அமரும் இருக்கைகள், கைப்பிடிகள் உள்ளிட்ட இடங்களில் மருந்து கலந்து  சுத்தம் செய்யப்படும். 
கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறத்தை சுகாதாரமற்ற முறையில் வைத்திருந்தால் சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளர்களுக்கு 
அபராதம் விதிக்கப்படுகிறது. அதன்படி, வீடுகளில் ரூ. 1,000 வரையும், கடைகள், நிறுவனங்களில் ரூ. 5 ஆயிரம் வரையும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. தினமும் அதிகாரிகள் பல்வேறு இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். பெரும்பாலும் 
டீக்கடைகள், ஹோட்டல்கள், பேக்கரிகளில் கொசு உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் அதிகமாக தேக்கி வைக்கப்பட்டு உள்ளது. கடந்த 2 மாதங்களில் இதுவரை 167 நிறுவனங்களுக்கு 
எச்சரிக்கைக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை  ரூ. 60 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com