போர்க்கால அடிப்படையில் நீர்  விநியோகம் சீரமைக்கப்படும்: மாநகராட்சி நிர்வாகம்

நீரேற்று இயந்திரங்களில் மீண்டும் சேறு தேங்கியுள்ளதால் குடிநீர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவு

நீரேற்று இயந்திரங்களில் மீண்டும் சேறு தேங்கியுள்ளதால் குடிநீர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவு போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஈரோடு மாநகராட்சிப் பகுதிக்கான குடிநீர் நீரேற்று நிலையங்கள் காவிரி ஆற்றின் நடுப் பகுதியிலும், கரைக்கு சற்று தள்ளியும் அமைந்திருப்பதால் ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும்போது நீர் சூழ்தல், நீரேற்று இயந்திரத்தில் சேறு தேக்கம் போன்ற காரணங்களால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் வசிக்கும் சுமார் 5.8 லட்சம் பேருக்கும், மாநகராட்சி சார்பில், வைராபாளையம், பி.பி.அக்ரஹாரம், காசிபாளையம், சூரியம்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள 6 நீரேற்று நிலையங்களில் சேமிக்கப்படும் தண்ணீர் அங்கிருந்து  மக்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், ஆகஸ்ட் மாத இறுதி வாரம் செப்டம்பர் முதல் வாரத்தில் அளவுக்கு  அதிகமான நீர் காவிரியில் சென்றதால் அனைத்து நீரேற்று நிலையங்களிலும் தண்ணீரும், சேறும் புகுந்ததால் குடிநீர் விநியோகம் தடைபட்டது. இந்தக் கோளாறு படிப்படியாக சீரமைக்கப்பட்டு செப்டம்பர் 15 ஆம் தேதித்திக்குப் பிறகு குடிநீர் விநியோகம் சீரமைக்கப்பட்டது. தற்போது, ஈரோட்டைச் சுற்றியுள்ள கோபி, பவானிசாகர், சத்தியமங்கலம் போன்ற பல பகுதிகளில் கடந்த 10 நாள்களாக பெய்து வரும் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சாக்கடை நீர், கழிவுகள், சேறு போன்றவை கலந்து  நீரேற்று நிலையங்களில் உள்ள இயந்திரங்களில் மீண்டும் புகுந்துள்ளதால் குடிநீர் விநியோகத்தில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஈரோடு மாநகராட்சி ஆணையர் மு.சீனிஅஜ்மல்கான் கூறியதாவது:
வழக்கம்போல இயந்திரங்களில் சேறு புகுந்ததால் குடிநீரேற்றுப் பணி பாதிக்கப்பட்டு 2 நாள்கள் குடிநீர் வழங்கும் பணி நிறுத்தப்பட்டது. இயந்திரங்கள் சீரமைக்கும் பணி  போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமையிலிருந்து விநியோகம் முழுமையாக சீரடைந்துவிடும். மாநகராட்சிப் பகுதிக்கு வழங்குவதற்காக அமைக்கப்பட்ட அனைத்து நீரேற்று நிலையங்களும், நீர் நிலைகளில் தாழ்வாக அமைந்துள்ளதால் சேறு புகுந்து விடுகிறது. ஊராட்சிக்கோட்டை குடிநீர்த் திட்டம் 2019 மார்ச் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம். அங்கு மிக அகலமாக ஆறு அமைந்துள்ள காரணத்தால் சேறு தேங்குவதற்கு வழியில்லை என்பதால்  பிரச்னை ஏற்படாது. அடுத்த 6 மாதங்களுக்குள் இதுபோன்ற இடையூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com