தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் கல்வி பயின்றால் வாழ்வில் உயர்வு பெறலாம்: அமைச்சர்  கே.சி.கருப்பணன்

மாணவ, மாணவியர் தன்னம்பிக்கை, தளராத முயற்சியுடன் கல்வி பயின்றால் வாழ்வில் உயர்வு பெறலாம் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார். 

மாணவ, மாணவியர் தன்னம்பிக்கை, தளராத முயற்சியுடன் கல்வி பயின்றால் வாழ்வில் உயர்வு பெறலாம் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார். 
பவானியை அடுத்த மைலம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் புரவலர் எம்.குப்பாண்ட கவுண்டரின் 23 ஆம் ஆண்டு நினைவு நாள், பள்ளியின் 50 ஆம் ஆண்டு பொன் விழா, கல்வி, விளையாட்டில் வென்றோருக்கு பரிசளிப்பு விழா ஆகியன மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில், புரவலர் எம்.குப்பாண்ட கவுண்டரின் 23 ஆம் ஆண்டு நினைவு கல்வெட்டைத் திறந்து வைத்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசியதாவது: 
இப்பள்ளிக்கு தனக்குச் சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை 50 ஆண்டுகளுக்கு முன்னரே தானமாக வழங்கியவர் எம்.குப்பாண்ட கவுண்டர். மேலும், அருகில் பள்ளி விரிவாக்கத்துக்கு 4.5 ஏக்கர் நிலத்தை வாங்கிக் கொடுத்துள்ளார். அவரது அர்ப்பணிப்பு உணர்வு மிகவும் பாராட்டத்தக்கது. தற்போது மிகப்பெரிய பதவி, பொறுப்புகளில் உள்ளவர்களில் பெரும்பாலும் அரசுப் பள்ளியில் படித்தவர்களே. மாணவ, மாணவியரின் வாழ்க்கைத் தரத்தைக் கல்வி மட்டுமே உயர்த்தும். தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் கல்வி பயின்றால் வாழ்வில் உயர்வு பெறலாம் என்றார். 
தொடர்ந்து, கல்வி, விளையாட்டுப் போட்டிகளில் சிறந்த மாணவ, மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், மாவட்ட முதன்மைக்  கல்வி அலுவலர் ரா.பாலமுரளி, மாவட்ட கல்வி அலுவலர் (பவானி) ரேணுகாதேவி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஏ.பி.சண்முகம், பள்ளித் தலைமையாசிரியர் ஆர்.மலர்கொடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com