"மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தைக் கைவிட வேண்டும்'

மிழ்நாடு சாலை போக்குவரத்துத் தொழிலாளர் சம்மேளனத்தின் (சிஐடியூ) சார்பில் நடைபெற்ற

தமிழ்நாடு சாலை போக்குவரத்துத் தொழிலாளர் சம்மேளனத்தின் (சிஐடியூ) சார்பில் நடைபெற்ற மாநில மாநாட்டில், மோட்டார் வாகனத் தொழில், தொழிலாளர் பாதுகாப்பு கருத்தரங்கம் சனிக்கிழமை  நடைபெற்றது.    
கருத்தரங்குக்கு, சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார். சிஐடியூ மாநிலத் தலைவர் செளந்தரராஜன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினார்.
தொடர்ந்து, மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தைக் கைவிட வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். சுங்கச்சாவடிக் கட்டணத்தைக் கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 25 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், சம்மேளன துணைத் தலைவர் அன்பழகன், சாலை போக்குவரத்து சங்க மாவட்டச் செயலாளர் கனகராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, சிஐடியூ மாநிலத் தலைவர் செளந்தரராஜன் அளித்த பேட்டி:
மத்தியில் பாஜக  ஆட்சிக்கு வந்த பிறகுதான், மோட்டார் வாகன உரிமையாளர்கள், மோட்டார் தொழிலில் ஈடுபடுவோர் வாழ்க்கையில் மிகப்பெரிய பாதகத்தை ஏற்படுத்தக் கூடிய சட்டத்தைக் கொண்டு வந்தது. இது மோட்டார் தொழிலை கார்ப்பரேட் கையில் ஒப்படைக்கிற ஏற்பாடுதான். நாடாளுமன்ற மேலவையில் நிலுவையில் உள்ள இந்த சட்ட மசோதாவை அரசு நிரந்தரமாகக் கைவிட வேண்டும். அரசு போக்குவரத்துக் கழகம் தொழிலாளர்களை அழிக்கும் நோக்கில்  செயல்பட்டு வருகிறது. தொழிலாளர்களுக்கு ரூ. 7 ஆயிரம் கோடி வரை பாக்கி வைத்துள்ளது.
மேலும், கடந்த நவம்பர் மாதம் வரை ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாமல் உள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற வேலை நிறுத்தத்தின்போது 3 அமைச்சர்கள், நீதிமன்றம் உள்ளிட்ட அனைவரும் தலையிட்டு அளித்த வாக்குறுதிகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. இதனால், போக்குவரத்துத் தொழிலாளர்கள் நவம்பர் 1 ஆம் தேதிக்குப் பிறகு மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
எனவே, பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தொழிலாளர்களுக்குத் தேவையான நிதியை அரசு ஒதுக்க வேண்டும். நடத்துநர் இல்லாமல் இயக்கப்படும் பேருந்துகள் மூலம் ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். தனியார் பேருந்துகளின்  கட்டணக் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும். மேலும், தனியார் பேருந்துகளைப் போல தரமான பேருந்துகளை தமிழக அரசும்  இயக்க வேண்டும். பழைய பேருந்துகளால்  பராமரிப்புச்  செலவு அதிகரித்துள்ளது. இதை பொது வெளியில் கூறியதால்  ஒரு தொழிலாளரைப் பணிநீக்கம் செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் நெடுஞ்சாலைத் துறை மட்டுமல்லாமல் அனைத்துத் துறையிலும் ஊழல் நடைபெறுகிறது. ஊழியர்கள் இடமாற்றம், வேலை நியமனம், நடத்துநர், துணை வேந்தர் நியமனம் உள்பட அனைத்திலும் ஊழல் இருப்பதாக ஆளுநரே சொல்லக்கூடிய நிலையில்தான் தமிழகம் உள்ளது. நெடுஞ்சாலைத் துறை ஊழல் குறித்து, சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே,  தமிழக முதல்வர்  தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். அப்போதுதான் நேர்மையான விசாரணை நடைபெறும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com