மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு புதிய கட்டடம்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

58 ஆண்டுகள் பழமையான ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

58 ஆண்டுகள் பழமையான ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோட்டில் 1955 -இல் அப்போதைய முதல்வராக இருந்த காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்ட  அரசு மருத்துவமனை 1960 -இல் 2 தளங்களோடு திறக்கப்பட்டது.
மாவட்டத் தலைநகராக உள்ள  ஈரோடு அரசு மருத்துவமனையில்  அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ பிரிவு, நுண்கதிர் பிரிவு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு, இயன்முறை சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, காது,மூக்கு தொண்டை பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இயங்கி  வருகின்றன.
இந்த மருத்துவமனைக்கு ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமின்றி அருகில் உள்ள திருப்பூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் தினமும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும், 800-க்கும்   மேற்பட்டவர்கள் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்களின் உறவினர்கள் இரவு நேரத்தில் தங்குவதற்காக  மருத்துவமனையின் பிரதான கட்டடத்தின் முன்பகுதியில் உள்ள மரத்தடியிலும், கட்டடத்தை ஒட்டியுள்ள கான்கிரீட் தளத்தையும் நாட வேண்டியுள்ளது. 
58 ஆண்டுகளைக் கடந்து விட்ட இந்த மருத்துவமனைக் கட்டடம் தற்போது பலமிழந்து உள்ளது. இதன் காரணமாக இக்கட்டடத்தின் இரண்டாவது தளத்திலுள்ள நிழற்கூரை அக்டோபர் 16 ஆம் தேதி இடிந்து விழுந்தது. இதில் தரையில் படுத்திருந்த 5 பேர் காயமடைந்தனர். 
இந்நிலையில், இக்கட்டடத்தில் சேதமடைந்த நிழற்கூரையை அகற்றிவிட்டு புதிய நிழற்கூரை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
இக்கட்டடத்தின் மற்றொரு பகுதியில் உள்ள நிழற்கூரைகளும் ஆபத்தான நிலையில் உள்ளன. மழைக்காலத்தில்  இந்த நிழற்கூரையும் இடிந்து  விழும் வாய்ப்பு அதிகமுள்ளது. உயிரைக் காத்துக்கொள்ள ஏழை, எளிய மக்கள் நாடி வரக்கூடிய அரசு தலைமை மருத்துவமனையில் இதுபோன்ற தற்காலிமாகச் செய்யப்படும் பணிகளால் நிரந்தரத் தீர்வு கிடைக்கப் போவதில்லை என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, ஈரோடு  மாமன்ற முன்னாள் உறுப்பினர் ராதாமணி பாரதி கூறியதாவது: 
இந்த மருத்துவமனை கட்டடம் 58 ஆண்டுகளைக் கடந்து விட்டதால் பலமிழந்து விட்டது. ஆகவே, நோயாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு பழமையான இக்கட்டடத்தை முழுமையாக இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்பதே மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாகும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com