குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் 232 பேர் தங்களது கோரிக்கைகள் குறித்த மனுக்களை அளித்தனர்.
குடிநீர்த் தட்டுப்பாட்டை  போக்கக் கோரிக்கை:
நம்பியூர் அருகே உள்ள காராப்பாடி எல்லைக்காடு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனு:
இப்பகுதியில் 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்கு ஆழ்துளைக் கிணறு அமைத்து  குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.  கடந்த 3 ஆண்டுகளாக இந்த ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் இல்லாததால் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள  மாரம்பாளையம் பகுதிக்குச் சென்று குடிக்கத் தண்ணீர் எடுத்து வருகிறோம். 
இதனால், முதியவர்கள், பெண்கள் மிகவும் சிரமப்படும் நிலை தொடர்கிறது. எனவே, எங்கள் பகுதியிலேயே குடிநீர் கிடைக்கும் வகையில் கிணறு அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
உள் விளையாட்டு அரங்கம் அமைக்கக் கோரிக்கை: ஈரோடு மாவட்ட கராத்தே அசோசியேஷன் கெளரவத் தலைவர் எம்.யுவராஜா தலைமையில், தலைவர் சக்திவேல், நிர்வாகிகள் அளித்துள்ள மனு:
சேலம், கோவை போன்ற மாவட்டங்களில் உலகத் தரம்வாய்ந்த உள் விளையாட்டு அரங்குகள் உள்ளன. ஆனால், ஈரோடு மாவட்டத்தில் உள் விளையாட்டு அரங்கம் இல்லை. இதனால், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளுக்கு வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெற முடியவில்லை. எனவே, அனைத்து மாணவர்களும் பயிற்சி பெறும் வகையில் ஈரோடு மாநகர் பகுதியில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
மயான ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்: மொடக்குறிச்சி அருகே உள்ள கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனு: எங்கள் ஊரின் கிழக்குப் பகுதியில் இருந்த சுடுகாடு பகுதியை  நாங்கள் வழித்தடமாகப் பயன்படுத்தி வந்தோம். இந்நிலையில் சுடுகாடு பகுதியை சிலர் ஆக்கிரமித்து விவசாய நிலங்களாக மாற்றிவிட்டனர். எனவே, சுடுகாட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
மாவட்ட ஆட்சியரிடம் 232 மனுக்கள்:
பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அளித்த 232 கோரிக்கை மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி, தொடர்புடைய துறை அதிகாரிகளிடம் ஆட்சியர் ஒப்படைத்தார். அதைத் தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் தையல் இயந்திரம், மாவு அரைக்கும் இயந்திரம் வாங்கவும், சுய தொழில் தொடங்குவதற்காக 19 பேருக்கு ரூ. 2 லட்சத்து 67 ஆயிரத்து 490 க்கான உத்தரவு, விதவை உதவித் தொகையாக ஒரு நபருக்கு ரூ. 10 ஆயிரம் பெறுதவற்கான உத்தரவையும் ஆட்சியர் வழங்கினார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் பிரபாவதி, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர்  புகழேந்தி, பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com