தினமணியின் மாணவர் மலர் ஓர் அரிய பொக்கிஷம்: மாவட்ட ஆட்சியர் பி.சங்கர்

"தினமணி' நாளிதழ் வெளியிட்டுள்ள மாணவர் மலர் ஓர் அரிய பொக்கிஷம் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் குறிப்பிட்டார்.

"தினமணி' நாளிதழ் வெளியிட்டுள்ள மாணவர் மலர் ஓர் அரிய பொக்கிஷம் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் குறிப்பிட்டார்.

தினமணியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள 2016-ஆம் ஆண்டுக்கான மாணவர் மலர் புத்தகங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.

இதற்கான நிகழ்ச்சி உதகையில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. எக்ஸ்பிரஸ் பப்ளிகேஷன்ஸ் கோவை, விற்பனைப் பிரிவு மேலாளர் சி.சோமசுந்தரம் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில், பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு மாணவர் மலர் புத்தகங்களை வழங்கிய மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் பேசியதாவது:

இன்றைய மாணவர் சமுதாயமே நாளைய தலைமுறையாகும். நாட்டின் எதிர்காலத்தை மாற்றும் வல்லமை கல்விக்கே உண்டு. எனவேதான், தமிழக அரசும் கல்விப் பணியில் சிறப்பாக செயலாற்றி வருகிறது.

இதையொட்டியே நடுநிலையான செய்திகளை வெளியிட்டு வரும் "தினமணி' நாளிதழ், செய்திகளுடன் தனது சமூகப் பணி முடிந்து விட்டதாகக் கருதாமல் ஏழை, எளிய மாணவர்களும் உயர் கல்வியை அடைய வழிகாட்டுகிறது. 12-ஆம் வகுப்பு படித்து முடித்ததும் அடுத்தது என்ன படிப்பது என்பதில் பெரும் குழப்பம் ஏற்படுவதைத் தற்போது தவிர்க்கமுடிவதில்லை. அதைப் போக்கும் வகையில், மாணவர்களின் தெளிவான சிந்தனைக்கு "தினமணி'உதவுகிறது. தினமணி வெளியிட்டுள்ள மாணவர் மலரில் கல்லூரிகள் தொடர்பான விவரங்கள், அவற்றிலுள்ள படிப்புகள் உள்ளிட்டவை குறித்து விவரமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, எந்தப் பாடப் பிரிவு படித்தால் வேலைவாய்ப்பு மற்றும் உடனடி வேலைவாய்ப்பு குறித்த தகவல்களும் இடம் பெற்றுள்ளன.

இந்த ஆண்டுக்கான மலரில் "நீட்' பொது நுழைவுத் தேர்வு குறித்தும், அதை எப்படி எதிர் கொள்வது என்பது குறித்தும், வெளிநாடுகளில் உள்ள கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள்

குறித்தும் விவரமாகத் தொகுத்தளிக்கப்பட்டுள்ளது. மேலும், திரைப்படத் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்தும் இம்மலரில் விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

நாம் இன்னமும் குறுகிய வட்டத்துக்குள்ளேயே உள்ளோம். ஆனால், படிப்பதற்கு ஏராளமான படிப்புகள் உள்ளன. இந்தப் படிப்புகள் தொடர்பாக "தினமணி' தொகுத்துள்ள மாணவர் மலர் புத்தகம் ஓர் அரிய பொக்கிஷமாகும். இந்தக் கையேட்டை பயன்படுத்தி, பெற்றோரின் விருப்பத்திற்கேற்ப மாணவ, மாணவிகள் சிறப்பாகப் படித்து, அதிக மதிப்பெண்கள் பெற்று வாழ்விலும் வெற்றி பெறுவதுடன், நாட்டின் சிறந்த குடிமக்களாகவும், உயர்ந்த பதவிகளில் இடம் பெறுபவர்களாகவும் உருவாக வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, உதகை நகர்மன்றத் தலைவர் கே.சத்யபாமா, நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் எஸ்.கே.ஜி.சுரேஷ்குமார், உதகை அரசினர் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் மாணிக்கவாசகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில், உதகை அரசு மேல்நிலைப் பள்ளி, அனிக்கொரை அரசு மேல்நிலைப் பள்ளி, தும்மனட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, தூனேரி அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மாணவர் மலர் புத்தகங்கள் விலையின்றி வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com