உதகை நகரில் இரவில் சுற்றித் திரிந்த காட்டெருமை

உதகை நகரில் இரவில் சுற்றித் திரிந்த காட்டெருமையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உதகை நகரில் இரவில் சுற்றித் திரிந்த காட்டெருமையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உதகை  நகரில் புதன்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் அரசினர் தாவரவியல் பூங்கா நுழைவாயிலிலிருந்து  சேரிங்கிராஸ் பகுதிக்கு காட்டெருமை ஒன்று  சாலையில் நடந்து வருவதாக காவல் துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து, அத்தகவல் வனத் துறையினருக்குத் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்குச் சென்ற வனவர் ஸ்ரீராம் தலைமையிலான வனக் குழுவினர்  அந்த காட்டெருமையை விரட்டியபோது, அது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள புதருக்குள் புகுந்தது. இரவு நேரம் என்பதாலும், போதிய வெளிச்சம் இல்லாததாலும் அதை  உடனடியாக அங்கிருந்து விரட்ட முடியவில்லை. மிகுந்த சிரமத்துக்குப் பின்னர் காட்டெருமையை கண்டுபிடித்து விரட்டியபோது, அங்கிருந்த  பாரத ஸ்டேட் வங்கி வளாகத்துக்குள் புகுந்து அங்கிருந்து கூட்செட் சாலை வழியாக மத்திய பேருந்து நிலையம் அருகே வந்த பின்னர் காந்தல் சாலையிலுள்ள தனியார் குடியிருப்பு பகுதிக்கு பின்புறம்  புகுந்துவிட்டது.  அதற்குள்  இரவு 11 மணியாகிவிட்டதால் அதை மேற்கொண்டு கண்டுபிடிக்கவோ அல்லது விரட்டவோ முடியவில்லை.
பின்னர், அதிகாலையில் அந்த காட்டெருமை இருந்த இடத்துக்குச் சென்றபோது அது அங்கிருந்து மான் பூங்கா செல்லும் வழியில் சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. வனத் துறையினர் அதை மீண்டும் விரட்டியபோது அது மான் பூங்கா பின்புறமுள்ள சோலைக்குள் புகுந்துவிட்டது.  இதற்கிடையே காந்தல் சாலை இரவு நேரத்திலும், இருசக்கர வாகனங்கள், மக்கள் நடமாட்டம் உள்ள சாலை என்பதால் மீண்டும்  அந்த காட்டெருமையால் பொதுமக்களுக்கு இடையூறு ஏதும் ஏற்படாமல் இருக்க மான் பூங்கா பகுதியிலிருந்து அருகிலுள்ள கேர்ன்ஹில் சோலைக்குள் அதை விரட்டும் பணியை வியாழக்கிழமை இரவு  மேற்கொள்ளவுள்ளதாக வனத் துறையினர் தெரிவித்தனர்.
உதகை நகரில் இரவு நேரத்தில் சுமார் 3 மணி நேரம்  சுற்றித் திரிந்த அந்தக் காட்டெருமையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com