உதகையில் தொடர் தூறல் மழை; பலத்த காற்று வீசியது: மரம் விழுந்து கிளாஸ் ஹவுஸ் கட்டடம் இடிந்தது

உதகையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக சனிக்கிழமையும் தூறல் மழை பெய்தது. திடீரென பலத்த காற்று வீசியதில் அரசினர் தாவரவியல் பூங்காவிலுள்ள கிளாஸ் ஹவுஸ் மீது மரம் விழுந்ததில்,

உதகையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக சனிக்கிழமையும் தூறல் மழை பெய்தது. திடீரென பலத்த காற்று வீசியதில் அரசினர் தாவரவியல் பூங்காவிலுள்ள கிளாஸ் ஹவுஸ் மீது மரம் விழுந்ததில், அக்கட்டடமே இடிந்து சேதமடைந்தது.
உதகையில் கடந்த மூன்று நாள்களாக பரவலாக மழை பெய்து வந்தாலும், பலத்த மழையாக இல்லாமல் தூறல் மழையாகவே உள்ளது. பகல் நேரத்திலும் மேகமூட்டம் காணப்படுவதால், எதிரில் வரும் வாகனங்கள்கூட, கண்களுக்குத் தெரிவதில்லை. இதனால், அனைத்து வாகனங்களுமே முகப்பு விளக்குகளைஎரியவிட்டபடி, இயக்கப்படுகின்றன. கடந்த மூன்று நாள்களாகவே இந்த நிலை நீடித்து வருகிறது.
தொடர் தூறல் மழை மற்றும் மேகமூட்டத்தின் காரணமாக உதகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் கடும் குளிர் நிலவுகிறது. இத்தகைய காலநிலையின் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைந்தே காணப்படுகிறது.
இந்நிலையில், சனிக்கிழமை காலையிலிருந்தே அவ்வப்போது தூறல் மழையும், மேகமூட்டமுமாக காணப்பட்ட நிலையில், பகலில் திடீரென பலத்த காற்று வீசியது. இதனால், அரசினர் தாவரவியல் பூங்காவில், மேல் பூங்கா பகுதியிலுள்ள கிளாஸ் ஹவுஸ் ( கண்ணாடி மாளிகை) மீது மரம் முறிந்து விழுந்ததில், அந்தக் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதையடுத்து, அக்கட்டடம் முழுவதும் சேதமடைந்தது.
ஏற்கெனவே, இந்த கட்டடம் ஸ்திரமற்ற நிலையில் இருந்ததால், பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாமல், பூட்டி வைக்கப்பட்டிருந்தது. முக்கிய விருந்தினர்களுக்காக மட்டுமே கிளாஸ் ஹவுஸ் திறக்கப்படுவது வழக்கம். மரம் முறிந்து விழுந்த சமயத்தில், அங்கு யாரும் இல்லாததால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் அதற்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகள், பல்வேறு அபூர்வ பூச்செடிகள் அனைத்தும் சேதமடைந்துவிட்டன.
தகவலறிந்து உடனடியாக அங்கு வந்த தோட்டக்கலைத் துறை அதிகாரிகள், விழுந்து கிடந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியை துரிதப்படுத்தியதோடு, சேதமடைந்த மலர்ச் செடிகள் மற்றும் மலர்த் தொட்டிகளையும் அப்புறப்படுத்தினர். உதகையைப் போலவே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது. தொடர்ந்து பரவலாக தூறல் மழையாவது பெய்துவருகிறதே என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம்: (மி.மீ. அளவில்).
அவலாஞ்சி-23, தேவாலா-20, கிளன்மார்கன், அப்பர் பவானி தலா 18, நடுவட்டம்-17, உதகை-10.2, எமரால்டு, கூடலூர் தலா 4, கல்லட்டி-3, கேத்தி-2, கோத்தகிரி-1.2 மி.மீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com