மயக்க மருந்துக்கு மயங்காத சிங்கவால் குரங்கு: பிடிக்க முடியாமல் திணறும் வனத் துறையினர்

நீலகிரி மாவட்டம்,  மஞ்சூர் அருகே உள்ள நெடுகல்கம்பை கிராமத்தில் குழந்தைகளைத் தாக்கும் சிங்கவால் குரங்கு மயக்க மருந்துக்கும்  மயங்காததால்

நீலகிரி மாவட்டம்,  மஞ்சூர் அருகே உள்ள நெடுகல்கம்பை கிராமத்தில் குழந்தைகளைத் தாக்கும் சிங்கவால் குரங்கு மயக்க மருந்துக்கும்  மயங்காததால், அதைப் பிடிக்க முடியாமல் வனத் துறையினர் திணறி வருகின்றனர்.
நெடுகல்கம்பை,  டிக்லாண்ட் லீஸ் ஆகிய கிராமங்களில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இக்கிராமங்கள் தேயிலைத் தோட்டம்,  அடர்ந்த  வனப் பகுதியையொட்டி அமைந்துள்ளன.
 டிக்லாண்ட் லீஸ் கிராமத்துக்குள் கடந்த மாதம் நுழைந்த சிங்கவால் குரங்கு அங்கு விளையாடிக் கொண்டிருந்த 5 குழந்தைகளைக்  கடித்தது. இதைத் தொடர்ந்து, அந்தக் குரங்கை கூண்டு வைத்துப் பிடிக்க 10 நாள்களுக்கும் மேலாக அங்கு முகாமிட்டிருந்தனர்.இந்நிலையில்,  நெடுகல்கம்பை பழங்குடியின கிராமத்துக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நுழைந்த அந்தக் குரங்கு அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவனைக் கடித்தது. இதையடுத்து,   பழங்களில் மயக்க மருந்து வைத்து அந்த சிங்கவால் குரங்கைப்  பிடிக்க வனத் துறையினர் முயன்றனர். ஆனால்,  அதை சாப்பிட்ட பிறகும் மயக்கம் அடையாமல் சுற்றி வருவதால், அந்தக் குரங்கைப் பிடிக்க  முடியாமல் வனத் துறையினர் திணறி வருகின்றனர்.
இதுகுறித்து நெடுகல்கம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் கூறுகையில்,  இந்தக் குரங்கை வனத் துறையினர் மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க வேண்டும்.  இந்தக் குரங்கு குழந்தைகளைத் தாக்குவதால் அவர்களை வீட்டை விட்டு வெளியே அனுப்புவதற்கு மிகுந்த அச்சமாக உள்ளது என்றார்.
இதுகுறித்து குந்தா வனச் சரகர் ராமச்சந்திரன் கூறியதாவது:
சிங்கவால் குரங்கு குந்தா வனச் சரகத்தில் இதுவரை இருந்ததே இல்லை. இது கேரள வனப் பகுதியில் இருந்து வழி தவறி வந்துள்ளது. மேலும்,  இப்பகுதியில் அதற்குத் தேவையான உணவு இல்லாததாலும்,  தனது குடும்பத்தை விட்டுப் பிரிந்த கோபத்திலும் மனிதர்களைத் தாக்கி வருகிறது. இந்தக் குரங்கை கூண்டு வைத்துப் பிடிக்க இரவு பகலாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவ்வாறு பிடிக்கப்படும்பட்சத்தில் கேரள வனப் பகுதியில் இந்தக் குரங்கு விடப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com