லாங்வுட் சோலைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தனியார் பங்களா: நடவடிக்கை எடுக்குமா வனத் துறை?

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சோலைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படும்  கோத்தகிரி லாங்வுட் சோலைக்கு மத்தியில் உள்ள  தனியாரின்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சோலைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படும்  கோத்தகிரி லாங்வுட் சோலைக்கு மத்தியில் உள்ள  தனியாரின் சொகுசு பங்களாவைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள தென்னை ஓலை வேலியால் அந்தச் சோலைக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  
கோத்தகிரியின் மையப் பகுதியில்  250 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது  லாங்வுட் சோலை.  இந்தச் சோலையில் 44 வகையான மர வகைகள், 32 வகையான புதர்கள்,  25 வகையான கொடிகள்,  ஐந்து வகையான எபிபைட்ஸ்கள்,  9 வகையான பெரணி வகைகள், ஆர்கிட்கள் உள்ளன.
மேலும்,  இந்தச் சோலை கோத்தகிரி சுற்றுவட்டார கிராமங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.
இந்தச் சோலைக்குள்  7 ஏக்கர் தனியாருக்குச் சொந்தமான நிலம் உள்ளது. அங்கு, கட்டப்பட்டுள்ள பங்களாவைச் சுற்றிலும் தென்னை ஓலைகளால் வேலி அமைக்கப்பட்டுள்ளது.  அடர்ந்த வனப் பகுதியில் இதுபோன்ற வேலிகள் அமைப்பதால் எளிதில் தீப்பற்ற வாய்ப்புள்ளது.
எனவே, இந்தச் சோலையைக் காப்பாற்றும் பொருட்டு அரசே அந்த இடத்தை மீட்டு பாதுகாக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து  லாங்வுட் சோலை பாதுகாப்புக் குழு செயலாளர் ராஜு கூறியதாவது:
பெய்லின் புரூக் என்ற ஆங்கிலேயர் இந்தச்  சோலையை  1905-இல் உருவாக்கி பாதுகாத்து வந்தார். இந்தச் சோலையில் பல்வேறு  மூலிகை, பெரணி வகைகள், ஆர்கிட்கள் ஆகியவற்றையும் அவர் நடவு
செய்துள்ளார்.
சுதந்திரத்துக்குப் பிறகு  தனியார்  இந்தச் சோலைக்குள்  இருக்கும்  பங்களாவைப் பயன்படுத்தி வந்தனர். தற்போது, மும்பையைச்  சேர்ந்த  ஒருவர் இந்த பங்களாவை வாங்கி பயன்படுத்தி வருகிறார்.  இதைச் சுற்றிலும்  தென்னை  ஓலைகளால்  வேலி  அமைக்கப்பட்டுள்ளது.
இவை,  எளிதில்  தீப்பற்றக் கூடும் என்பதால் அதை அகற்ற வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகவே,  இந்த பங்களாவை  அரசே கையகப்படுத்தி பாதுகாக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com