உதகையில் சர்வதேச யானைகள் தினம் அனுசரிப்பு

உதகை அரசு கலைக் கல்லூரியில் சர்வதேச யானைகள் தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

உதகை அரசு கலைக் கல்லூரியில் சர்வதேச யானைகள் தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
 சர்வதேச யானைகள் தினம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.  இதையொட்டி,  உதகை அரசு கலைக் கல்லூரியில் விலங்கியல், வன விலங்கியல் துறைகளின் சார்பில் இந்நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பேராசிரியர் சனீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியல் விலங்கியல் மற்றும் வனவிலங்கியல் துறை  மாணவ,  மாணவியர்,  யானை முகமூடிகளை அணிந்து ஊர்வலம் சென்றனர்.
   இதில் பங்கேற்ற சர்வதேச யானை ஆராய்ச்சியாளரான  டாக்டர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:
    உலகெங்கிலும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி சர்வதேச யானைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. ஆசிய யானைகள்,  1972-ஆம் ஆண்டின் வனப் பாதுகாப்பு சட்டத்தின்படி அழிந்து வரும் வன விலங்குகளின் பட்டியலில் இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து யானைகள் பாதுகாப்பு,  யானைகள் வாழும் வனத்தில் வன உயிர்ப்பன்மை  மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வனப் பகுதிகளுக்குள் உப்பு மண் கண்டறிதல்,  நீர்நிலைகள் கண்டறிதல்,  புதிய வழித் தடங்கள்,  விதைப் பரவல் போன்றவை யானைகளாலேயே  நடைபெறுக்கின்றன. 13 நாடுகளில் தற்போது 47,000 முதல் 50,000 யானைகள் வரை வாழ்கின்றன.
  இதில், பாதிக்கும் அதிகமாக  26,000 முதல் 27,000 வரையிலான யானைகள் இந்தியாவில் வாழ்கின்றன. இதில்,  நீலகிரி, பந்திப்பூர், வயநாடு,  சத்தியமங்கலம் ஆகிய ஒருங்கிணைந்த பகுதிகளில் மட்டும் சுமார் 6,000 யானைகள் வாழ்கின்றன. சுமார் 12,000 சதுர கி.மீ. பரப்பளவில் கூடுதலான எண்ணிக்கையில் யானைகள் இருப்பது இப்பகுதியில் மட்டும்தான்.
   யானைகள் வாழ்விடங்களில் வேட்டைத் தடுப்பு பணிகளை மேற்கொள்ளவும்,  ஆண் யானைகளைப் பாதுகாப்பதைப்போல பெண் யானைகளையும் பாதுகாக்க  வேண்டும்.  வழித்தட பாதுகாப்பு,  வனத் தீ பரவலைத் தடுத்தல்,   நீர்நிலை, வன மேம்பாடு ஆகியவையே ஆசிய யானைகளைக் காப்பாற்றும். மேலும்,  யானைகளைப் பாதுகாக்க மனித-யானை முரண்பாட்டினைத் தவிர்த்து  உள்ளூர் மக்களும் யானைகளோடு ஒத்து வாழும் மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் யானைகளை காப்பாற்ற முடியும் என்றார்.
 பேராசிரியர்கள் மோகனகிருஷ்ணன்,  கண்ணன், சிவராஜ் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com