உதகையில் அதிகரித்த சுற்றுலாப் பயணிகள் கூட்டம்

உதகையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக சுற்றுலாப் பயணிகளின்  கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

உதகையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக சுற்றுலாப் பயணிகளின்  கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
 சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களால்  உதகை-குன்னூர் சாலை, உதகை-தொட்டபெட்டா சாலை மற்றும் உதகை-படகு இல்லம் சாலைகளில் ஏற்பட்ட  நெரிசலால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  அதேபோல ஏடிஎம் மையங்களில் பணமில்லாததால் சுற்றுலாப் பயணிகள் பெரும் அவதியுற்றனர்.
வார விடுமுறை நாள்களோடு,  கிருஷ்ண ஜயந்தி மற்றும் சுதந்திர தின நிகழ்வுகளும் சேர்ந்து கொண்டதால் தொடர்ந்து 4 நாள்கள் விடுமுறை கிடைத்துள்ளது.  இதன் காரணமாக உதகையில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் பல மடங்கு  அதிகரித்துள்ளது.
உதகையில் அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு கடந்த 2 நாள்களில் சுமார் 29,000 சுற்றுலாப் பயணிகள் வந்திருந்த நிலையில் சனிக்கிழமை சுமார் 16,000  சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். அதைப் போலவே,  படகு இல்லத்துக்கு சுமார் 12,000 பேரும், அரசினர் ரோஜா  பூங்காவுக்கு 10,000 சுற்றுலாப் பயணிகளும் வந்திருந்தனர்.  தொட்டபெட்டா மலைச்சிகரம் சாலையில் சுமார் 3 கி.மீ தொலைவுக்கு வாகனங்கள் பல மணி நேரம் காத்திருந்து மெதுவாக ஊர்ந்து சென்றன.
அதைப்போலவே குன்னூரிலிருந்து உதகை வந்த வாகனங்களும்,  உதகையிலிருந்து பைக்காரா மற்றும் முதுமலை  செல்ல வேண்டிய வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.  
சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தின் காரணமாகவும்,  வங்கிகளுக்கும் தொடர் விடுமுறை என்பதாலும் பெரும்பாலான ஏடிஎம்களில் திங்கள்கிழமை பகலிலிருந்து பணமில்லாத நிலை ஏற்பட்டது.  பெரிய உணவகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் அட்டைகளை வைத்திருந்தோர் பயன்படுத்திக் கொண்டனர். இவர்களைத் தவிர ஏடிஎம் மையங்களை நம்பி வந்த பெரும்பாலானோர் பெரிதும் அவதியுற்றனர்.  சுதந்திர தினத்தையொட்டி மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு வரை மாவட்டத்தில் உதகை-மேட்டுப்பாளையம் சாலை ஒருவழிப் பாதையாக அறிவிக்கப்பட்டிருந்தாலும்,  செவ்வாய்க்கிழமை  பகலிலேயே  கூட்டம்  குறையத் தொடங்கி விடுமென்பதால்  போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக  காவல்துறையின் சார்பில் பல்வேறு சாலைகள்  உதகை நகருக்குள்ளும் ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com