நீலகிரி மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தேசியக் கொடியை ஏற்றிவைத்து, காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
 தொடர்ந்து, காவல் துறையினரின் இசைக் குழுவினர் அணிவகுத்து வர, அவர்களைத் தொடர்ந்து சிறப்புக் காவல் படையின் ஆண்கள் பிரிவு,  மகளிர் பிரிவு,  ஊர்க்காவல் படையினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காவல் துறையில் சிறப்பாகப் பணிபுரிந்தமைக்காக உதகை நகர காவல் ஆய்வாளர் ரவீந்திரன் உள்ளிட்ட 21 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
தொடர்ந்து, ஒரே மகனை ராணுவப் பணிக்கு அனுப்பி வைத்ததற்காக குந்தாவைச் சேர்ந்த ரூபி, குன்னூரைச் சேர்ந்த இருதய மேரி, ஜெபமாலை மரியன், உதகையைச் சேர்ந்த ஷைலா ஜான்,  எம்.பாலடாவைச் சேர்ந்த லட்சுமணன் ஆகியோருக்கு முன்னாள் படைவீரர் நல அலுவலகம் சார்பில் மானியத் தொகையாக ரூ. 50,000-ஐ வழங்கினார்.
அதேபோல, கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சிறப்பாகப் பணியாற்றியதற்கான விருதை கால்நடை ஆய்வாளர் கிருஷ்ணகுமாருக்கும்,  மருத்துவம்,  குடும்ப  நலத் துறை சார்பில் சிறப்பாகப்  பணியாற்றியதற்காக  மருத்துவர்கள் ஆர்.லட்சுமிபிரியா, அசோக், பி.ரமேஷ் ஆகியோருக்கும் வழங்கினார்.
 சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் நீலகிரி மாவட்டத்திலிருந்து பங்கேற்று மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்த எம்.நேஹா ஆஷிகா, கவுபிக் அகமது, ஸ்ரீஜித், பிரனேஷ், சம்வதனா, சித்தார்த், வைஷ்ணவி,  தன்வந்த், தரனீஷ் ஆகியோருக்கும் பரிசு வழங்கினார். முன்னோடி வங்கியின் மூலம் கல்விக் கடன், வாகனக் கடன்,  தொழில் கடன், விவசாயக் கடனாக 13 பேருக்கு ரூ. 26 லட்சத்தையும்,  பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் 8 பேருக்கு தையல் இயந்திரங்களையும் வழங்கினார்.
 மேலும், வருவாய்த் துறை சார்பில் 10 பேருக்கு உதவித் தொகையும், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் 10 பேருக்கு ரூ. 38,000 மதிப்பிலான  பொருள்களையும் என மொத்தம் 58 பயனாளிகளுக்கு ரூ. 46 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
தொடர்ந்து, பழங்குடியினரான தோடர், கோத்தர், பள்ளி, கல்லூரி மாணவ,  மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

குன்னூர், கோத்தகிரியில்...
குன்னூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர்  கீதாபிரியா தேசியக் கொடியை  ஏற்றிவைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். அதேபோல, காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் துணைக் கண்காணிப்பாளர் அ.முத்தமிழ் தேசியக் கொடியை ஏற்றிவைத்தனர். குன்னூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையர் பா.முகமது சிராஜ், தேசியக்  கொடியை  ஏற்றிவைத்தார். தனியார் அமைப்புகள் சார்பிலும் சுதந்திர தினம் வெகுவிமரிசையாகக்  கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்ட அண்ணா வியாபாரிகள் சங்கம் பெட்போர்டு சார்பில், டாக்டர் சாமுவேல்  அமிர்தராஜ் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். விழாவில், பல்வேறு பேச்சுப் போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதேபோன்று சுற்றுலா வாகன ஓட்டுநர்கள், ஆட்டோ  ஓட்டுநர்கள் சங்கம், பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
கோத்தகிரி  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லட்சுமி நரசிம்மன், ஜெயபிரகாஷ், ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றினர். வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் பரமேஸ்வரி, பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் குணசேகரன் ஆகியோர் தேசியக் கொடியேற்றினர்.
போக்குவரத்து காவல் நிலையத்தில் போக்குவரத்து ஆய்வாளர்  அருள்முருகன் தேசியக் கொடியேற்றினார். கோத்தகிரி கூட்டுறவுச் சங்க தலைமையகத்தில் மேலாளர் மூர்த்தி தேசியக் கொடியை ஏற்றினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com