பசுந்தேயிலை விலை நிர்ணய அறிவிப்பில் தாமதம்: உறுப்பினர்கள் பாதிப்பு

நீலகிரி மாவட்டக் கூட்டுறவுத் தொழிற்சாலைகளில் பசுந்தேயிலை விலை நிர்ணய அறிவிப்பில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தால் கூட்டுறவு  உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டக் கூட்டுறவுத் தொழிற்சாலைகளில் பசுந்தேயிலை விலை நிர்ணய அறிவிப்பில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தால் கூட்டுறவு  உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில், 15 கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், 25 ஆயிரம் பேர் அங்கத்தினர்களாக உள்ளனர். அவர்கள் தங்களது தேயிலைத் தோட்டத்தில் பறிக்கும் பசுந்தேயிலையை  அந்தந்த தொழிற்சாலைக்கு விநியோகித்து வருகின்றனர். பசுந்தேயிலைக்கு கடந்த பல ஆண்டுகளாகப் போதிய விலை இல்லாதபோதும், மாற்றுத் தொழில் ஏதும் இங்கு இல்லாததாலும், கிடைக்கும் விலையைப் பெற்று தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நடப்பு ஆண்டில் கடந்த இரண்டு மாதங்களாகப் பரவலாகப் பெய்த மழையால் தேயிலை மகசூல் படிப்படியாக அதிகரித்தது. சில கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளில் வழக்கத்தைவிட, ஒரு நாள் கொள்முதல் 50 ஆயிரம் கிலோவை எட்டியது. கடந்த மே மாதத்தில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட தேயிலைத் தூள்,  தொடக்கத்தில் 40 லட்சம் கிலோ வரை தேக்கமடைந்த நிலையில், தற்போது அந்தந்தக் கூட்டுறவுத் தொழிற்சாலை, குன்னூர் கிடங்குகளில் 25 லட்சம் கிலோ வரை இன்னும் தேக்கமடைந்துள்ளது.
இங்கு விற்பனையாகும் தேயிலைத் தூளும் சராசரியாக கிலோவுக்கு ரூ. 60 மட்டும் கிடைத்து வருகிறது. இதன் மூலமாக செலவினங்களைக் கணக்கிட்ட தொழிற்சாலை நிர்வாகங்கள், உறுப்பினர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை முறையாக வழங்க முடியாததால் உறுப்பினர்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளனர். மறுபுறம் தொழிலாளர்கள், அலுவலகப் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளது.
பொதுவாக, பசுந்தேயிலைக்கான விலை நிர்ணயம் மாதந்தோறும் 10-ஆம் தேதிக்குள் குன்னூர், இன்கோ சர்வ் நிர்வாகத்தால் அறிவிக்கப்படும். நடப்பு மாதத்தில் 10-ஆம் தேதி கடந்தும் இன்னும் விலை நிர்ணயிக்கப்படவில்லை. அதே வேளையில், தேயிலை வாரியம் கிலோவுக்கு, ரூ. 11.50 கொடுக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. உற்பத்தி செய்யப்பட்ட பல லட்சம் கிலோ தேயிலைத் தூள் தேக்கமடைந்திருப்பதால் செலவினங்களைக் கணக்கிட்ட நிர்வாகம், கிலோவுக்கு அதிகபட்சமாக ரூ. 6  கிடைக்கும் என முடிவு செய்துள்ளது.
அதிலும், சில தொழிற்சாலைகளில் இன்னும் விலை குறைய வாய்ப்புள்ளது என்பதால் நிர்வாகம் செய்வதறியாமல் திணறி வருகிறது. இந்தச் சூழ்நிலையில், பசுந்தேயிலை கிலோ ரூ. 10-க்கு குறைவாக விலை நிர்ணயம் செய்தால் போராட்டம் நடத்தப்படும் என சிறு விவசாயிகள் ஏற்கெனவே அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், விலை நிர்ணயத்தை அறிவித்தால் பிரச்னை ஏற்படும் என்று நிர்வாகம் காலம் தாழ்த்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, கூட்டுறவுத் தொழிற்சாலை மேலாண்மை இயக்குநர் ஒருவர் கூறுகையில், "பல லட்சம் கிலோ தேயிலைத் தூள் தேக்கமடைந்துள்ள நிலையில் கிலோவுக்கு அதிகபட்சமாக ரூ. 6 கிடைக்க வாய்ப்பிருப்பதால் இந்தக் குறைந்த  விலையை அறிவிப்பதில்  காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகத்  தெரிகிறது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com