உதகையில் விநாயகர் விசர்ஜன விழா: ஹிந்து, இஸ்லாமிய மதத்தினருடன்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆலோசனை

நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 26 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள விநாயகர் விசர்ஜன விழா தொடர்பாக, ஹிந்து, இஸ்லாமிய மதத்தினருடன்

நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 26 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள விநாயகர் விசர்ஜன விழா தொடர்பாக, ஹிந்து, இஸ்லாமிய மதத்தினருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா கூட்டாக ஆலோசனை நடத்தினார்.
 விநாயக சதுர்த்தியையொட்டி, ஆகஸ்ட் 26 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள விநாயகர் விசர்ஜன விழாவின்போது எவ்வித அசம்பாவிதமும்  நடைபெறாமல் சுமுகமான முறையில் விழா நடைபெறுவது தொடர்பாக காவல் துறையின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக, ஹிந்து சமய பொறுப்பாளர்கள், இஸ்லாமிய மதத் தலைவர்களுடன் புதன்கிழமையும், வெள்ளிக்கிழமையும் தனித்தனியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
 இதைத் தொடர்ந்து, கூட்டு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இதில், மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர்கள், அனைத்து உள்கோட்ட காவல் அதிகாரிகள் பங்கேற்றனர்.  
 இக்கூட்டத்தில், விநாயகர் விசர்ஜன ஊர்வல நாள்களின்போது கடைப்பிடிக்க வேண்டிய, தவிர்க்க வேண்டிய செயல்கள் குறித்து விவாதிக்கப்பட்டு இரு தரப்பினருக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.
 குறிப்பாக, வீண் வதந்திகளைப்பரப்புதல், கோஷம் போடுதல், மசூதிகளின் முன்பு வாத்தியங்களை முழக்குதல், பிற சமுதாய மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசுகல், சைகை காட்டுதல், செல்லிடப் பேசிகளில் படம் பிடித்தல், பட்டாசு வெடித்தல் ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும்.   
 மேலும்,  இதற்கு முன்னர் சிலைகளை வைத்த இடங்களில் மட்டுமே நடப்பு ஆண்டிலும் சிலைகள் வைக்க அனுமதி உள்ளது. சிலைகள்  உரிய பாதுகாப்புடன் வைக்கப்பட வேண்டும். மசூதிகள், கிறிஸ்தவ தேவாலயங்களின் அருகில் சிலைகளை வைத்தல், விளம்பர நோட்டீஸ்களை ஒட்டுதல் ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற இரு தரப்பினரும் ஊர்வலம் அமைதியான முறையில் நடைபெற முழு ஒத்துழைப்பு அளிப்பதாக  தெரிவித்ததையடுத்து,  இந்த ஊர்வலங்களுக்கு காவல் துறையினர் தேவையான அளவில் பாதுகாப்பு அளிப்பர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா உறுதியளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com