தமிழக - கேரள எல்லை வனப் பகுதியில் மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டை தீவிரம்

மஞ்சூர் அருகே உள்ள தமிழக - கேரள எல்லைப் பகுதிகளிலுள்ள வனப் பகுதியில் நக்ஸல் தடுப்புப் பிரிவு போலீஸார் மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டையில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.

மஞ்சூர் அருகே உள்ள தமிழக - கேரள எல்லைப் பகுதிகளிலுள்ள வனப் பகுதியில் நக்ஸல் தடுப்புப் பிரிவு போலீஸார் மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டையில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.
 நீலகிரி மாவட்டத்தில் முள்ளி, கெத்தை ஆகிய பகுதிகள் தமிழகம், கேரளம் ஆகிய மாநில எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ளன. இதனால், இப்பகுதிகளில் உள்ள அடர்ந்த வனப் பகுதி வழியாக மாவோயிஸ்டுகள் ஊடுருவி வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.  
 மேலும், மஞ்சூர் அருகே உள்ள நெடுகல்கோம்பை, டிக்லாண்டீஸ், பெள்ளத்திகம்பை உள்ளிட்ட பகுதிகளில் மாவோயிஸ்டுகள் ஊடுருவி பல்வேறு உதவிகள் செய்து தருவதாகக் கூறி  இப்பகுதி மக்களை சட்ட விரோத செயல்களில் ஈடுபடுத்த முயற்சிப்பதாகவும் தொடர்ந்து தகவல் கிடைத்து வருகிறது.
 இதனால், மாவட்ட எல்லைப் பகுதிகளையொட்டி உள்ள வனப் பகுதியில் போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா உத்தரவின்பேரில்,
உதகை புறநகர் காவல் துணைக் கண்காணிப்பாளர் பாலமுருகன் மேற்பார்வையில் 10 கொண்ட நக்ஸல் தடுப்புப் பிரிவு போலீஸார், தமிழக - கேரள எல்லையோர பகுதிகளிலுள்ள வனப் பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.
 அதன்படி, கோரகுந்தா, கோரகுந்தாமந்து,  நரிக்குழிமந்து, கோழிமந்து, மடிப்புமலை, மீன்பாடி போகும் மலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வனப் பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
 அப்போது, அப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்களிடம் அடையாளம் தெரியாத நபர்கள் வந்தால் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com