வனத்தைக் காப்பது நமது கடமை: மத்திய அமைச்சர்

வனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது எதிர்கால சந்ததியினருக்கு நாம் செய்ய வேண்டிய கடமை என்று  மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் ஞாயிற்றுக்கிழமை பேசினார்.

வனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது எதிர்கால சந்ததியினருக்கு நாம் செய்ய வேண்டிய கடமை என்று  மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் ஞாயிற்றுக்கிழமை பேசினார்.
 முதுமலை புலிகள் காப்பகத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகள், வன வளம், பாதுகாப்பு, புலிகள் உள்ளிட்ட வன விலங்குகளின் பாதுகாப்பு, மனித - வன விலங்குகள் மோதலைத் தவிர்க்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து  மத்திய வனம், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆய்வு மேற்கொண்டார்.
 முன்னதாக, புலிகள் காப்பக வனப் பகுதியில் உள்ள நீர் ஆதாரங்கள் குறித்து புலிகள் காப்பக அதிகாரிகளுடன் வனப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, தெப்பக்காடு பயிற்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புலிகள் காப்பக வனத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள், வனப் பணியாளர்களுக்கான நலத் திட்டங்கள், பழங்குடி இன மக்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்கள், ஊக்குவிப்புத் திட்டங்கள், சூழல் சார்ந்த சுற்றுலா வளர்ச்சி, வனப் பகுதியிலுள்ள மக்களுக்கான மறு குடியமர்வு குறித்து முதுமலை புலிகள் காப்பக கள இய்ககுநர் ஸ்ரீனிவாஸ் ஆர்.ரெட்டி விளக்கமளித்தார்.
 தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது:
 நாட்டில் வனப் பகுதியின் பரப்பளவு அதிகரித்து வருகிறது. வனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது எதிர்கால சந்ததியினருக்கு நாம் செய்ய வேண்டிய கடமை.
வன விலங்கு பாதுகாப்பு, வன விரிவாக்கம், வனக் குற்றங்களைத் தடுத்தல், குற்றங்களுக்கான தண்டனைகளை அதிகரித்தல், இழப்பீடு வழங்குதல் போன்றவை உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்பேரில் நடைபெறுகின்றன.
 மேலும், வனப் பகுதியில் தாவர உண்ணிகளுக்கான உணவுப் பற்றாக்குறையைப் போக்க களைத் தாவரங்கள் படிப்படியாக அகற்றப்படும். வறட்சிக் காலத்தில் தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய தொண்டு அமைப்புகள் உதவியுடன் தேவையான இடங்களில் ஆழ்துளைக் கிணறு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 இந்த ஆய்வின்போது, கள இணை இயக்குநர் சரவணன், தமிழ்நாடு தலைமை முதன்மை வனப் பாதுகாவலர் ஸ்ரீதர், கேரள மாநிலம், முத்தங்கா வன விலங்குகள் சரணாலய பாதுகாவலர் சாஜன், முதுமலை
புலிகள் காப்பக வனச் சரக அலுவலர்கள் மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com