மீண்டும் சிக்கலில் எச்பிஃஎப் தொழிற்சாலை

நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வந்த ஒரே பொதுத் துறை நிறுவனமான எச்பிஃஎப் தொழிற்சாலை மீண்டும் சிக்கலைச் சந்தித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வந்த ஒரே பொதுத் துறை நிறுவனமான எச்பிஃஎப் தொழிற்சாலை மீண்டும் சிக்கலைச் சந்தித்துள்ளது.
 சுமார் 5,000 தொழிலாளர்கள் பணியாற்றி வந்த இத்தொழிற்சாலையில் தற்போது 167 தொழிலாளர்கள் மட்டுமே  உள்ள நிலையில் இவர்களை உடனடியாக வெளியேற்ற மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம்  தயக்கம் காட்டி வருகிறது.  இதன் காரணமாக கடந்த 8 மாதங்களாக இவர்களுக்கு சம்பளமும் வழங்காத நிலையில் தொழிலாளர்களின் போராட்டம் ஒருபுறம் நடந்து வர அவர்களது   குடும்பத்தினரும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 தென்கிழக்கு ஆசியாவிலேயே இருந்த ஒரே பிலிம் தொழிற்சாலையான உதகையிலுள்ள எச்பிஃஎப் தொழிற்சாலை தாராளமயமாக்கல் கொள்கையால் 1990-ஆம் ஆண்டுக்குப் பின்னர்  நஷ்டத்தை சந்தித்து பின்னர் நலிவடைந்த தொழிற்சாலையாக மாறியது. அதைத்தொடர்ந்து டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இத்தொழிற்சாலையில் பிலிம் உற்பத்தி  குறைந்ததோடு,  மருத்துவமனைகளுக்கான எக்ஸ்ரே பிலிமும்,  டிஜிட்டல் மயமாகிவிட்டதால் அதன்  தேவையும் குறைந்ததால் அந்த உற்பத்தியும் நிறுத்தப்பட்டது.
 இதனால் இத்தொழிற்சாலையில் ஊழியர்களின் எண்ணிக்கையும்  குறையத் தொடங்கியது. இதைத்தொடர்ந்து விருப்ப ஓய்வுத் திட்டம் அறிவிக்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு குழுவாக வெளியேறிய பின்னர் தற்போது 167 தொழிலாளர்கள் மட்டும் உள்ளனர்.  விருப்ப ஓய்வுத்திட்டத்துக்காக 2013-ஆம் ஆண்டில் மத்திய அரசு ரூ. 302 கோடி ஒதுக்கியது.  அதில் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடனாக ரூ. 200 கோடிசெலுத்தப்பட்டு விட்டது.  மீதமிருந்த தொகையில் விருப்ப ஓய்வுத் திட்டத்துக்காக விண்ணப்பித்த 409 தொழிலாளர்கள் வெளியேறிவிட்ட நிலையில் தற்போது 167 தொழிலாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.
 விருப்ப ஓய்வுத் திட்டத்தின்கீழ் இவர்களும் வெளியேறலாம் என நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டபோது,  தங்களுக்கு இன்னும் வயதும்,  பணிபுரிவதற்கான ஆண்டுகளும் இருப்பதால் உடனடியாக வெளியேற முடியாது என மறுத்து விட்டனர்.  அதைத் தொடர்ந்து கடந்த 8 மாதங்களாக இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. ஆனால்,   தற்போது தொழிலாளர்கள் வெளியேறுவதென தீர்மானித்துள்ளனர். ஆனால்,   அதற்கு கனரக தொழில்துறை அமைச்சகம் இன்னமும் அனுமதி அளிக்கவில்லை.
 இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் 167 தொழிலாளர்களும் தொடர்ந்த வழக்கில் கடந்த
ஜூலை 28-ஆம்தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் 2 மாதங்களுக்குள் 167 தொழிலாளர்களுக்கும் விருப்ப ஓய்வுத் திட்டத்தின் கீழ் கணக்கு முடித்து தொகையை வழங்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.  ஆனால்,  உதகை மற்றும் சென்னை அம்பத்தூரிலுள்ள இத்தொழிற்சாலைக்கு சொந்தமான சொத்துகளை விற்று அதன் மூலம் கிடைக்கும் தொகையிலிருந்தே இவர்களுக்கான தொகையை வழங்க முடியுமென மத்திய கனரக தொழில்துறை இணை செயலர் பாண்டா தெரிவித்துள்ளார்.
 இதன் காரணமாக கடந்த 8 மாதங்களாக சம்பளமில்லாத நிலையிலும்,  விருப்ப ஓய்வு கிடைக்காத காரணத்தாலும் 167 தொழிலாளர்கள் மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினரும் தொழிற்சாலை முற்றுகை உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
 இத்தொழிற்சாலையின் நிலவரம் குறித்து எச்பிஃஎப் தொழிற்சாலை தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் மஞ்சை மோகன்,  துணைத் தலைவர் சார்லஸ், செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உதகையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 பிலிம் தொழிற்சாலை என்பது தற்போது லாபமற்ற துறையாக மாறிவிட்டதால்,  நீதிமன்ற வழிகாட்டுதலின்படி 2 மாதத்துக்குள் விருப்ப ஓய்வில் முறையான பணப் பயன்களை எவ்விதமான பிடித்தமும்  இன்றி பெற்றுச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.  இத்தொழிற்சாலை அமைந்துள்ள இடம் 670 ஏக்கர் பரப்பளவு கொண்டது.  இதில் தமிழக அரசுக்கு சொந்தமான நிலம் 303 ஏக்கராகும். இந்நிலத்தைப் பயன்படுத்தி நீலகிரியின் வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தைப் பெருக்கும் நிலையை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றனர்.
தற்போதைய சூழலில் நீலகிரி மாவட்டம் தொழிற்சாலைகளே இல்லாத மாவட்டம் என்ற நிலையில் உள்ளதால்  மூடப்பட்டுள்ள எச்பிஃஎப் தொழிற்சாலையை வேறு பயன்பாட்டுக்கு ஒதுக்கும் வகையிலான அறிவிப்பு வெளியாகும் நிலையுள்ளதாலும்,  அதன் மூலம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாலும் இத்தொழிற்சாலை குறித்த அறிவிப்பை நீலகிரி மாவட்ட மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கியிருந்த சூழலில் மத்திய கனரக தொழில்துறை அமைச்சகத்தின் பிடிவாதத்தால் எச்பிஃஎப் தொழிற்சாலை மீண்டும் சிக்கலில் சிக்கியுள்ளது.
இந்நிலையில்,  எச்பிஃஎப் தொழிற்சாலை பகுதிகளை ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com