நீலகிரியில் விநாயக சதுர்த்தி விழா கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டத்தில் விநாயக சதுர்த்தி விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் விநாயக சதுர்த்தி விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும், வழிபாட்டு மையங்களிலும் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்து விநாயகருக்கு அருகம்புல் மாலையுடன் சிறப்பு பூஜைகள் செய்து கொழுக்கட்டைகள் படைத்தனர். உதகை  நகரில் மட்டுமின்றி அருகிலுள்ள கிராமப் பகுதிகளில் அமைந்துள்ள விநாயகர் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு, ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.
உதகையில் உள்ள விநாயகர் கோயில்களில் காலையிலிருந்தே நடத்தப்பட்ட சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னர் மாலையில்  அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகர்  திருவீதி உலாவும் நடைபெற்றது.
முதுமலை  புலிகள் காப்பகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் வனத் துறை செயலர் நிஜாமுதீன் தலைமையேற்று நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தார். இதில், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் சீனிவாச ரெட்டி,  துணை இயக்குநர் சரவணன், வனச் சரகர்கள் ஞானதாஸ், சிவகுமார், மாரியப்பன், வனத் துறை கால்நடை மருத்துவர் விஜயராகவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள விநாயகர் கோயிலில்  யானை கிருஷ்ணா மணியடித்து பூஜை செய்ய, அதைத் தொடர்ந்து அங்கு அணிவகுத்து நின்ற 20-க்கும் மேற்பட்ட வளர்ப்பு யானைகளும் பிளிறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தின. தொடர்ந்து, அனைத்து யானைகளுக்கும் கொழுக்கட்டையுடன் சிறப்பு உணவுகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமின்றி கேரளம், கர்நாடக மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திரண்டிருந்தனர்.
மஞ்சூரில்...
மஞ்சூர்,  குந்தா பாலம், கொட்டரக்கண்டி, சிவசக்தி நகர், எமரால்டு, பிக்கட்டி, எடக்காடு, மேல்குந்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒன்றரை அடி முதல் 6 அடி வரையிலான 22 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இவை அனைத்தும் அந்தந்தப் பகுதியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டன. சிலைகள் அனைத்தும் உதகைக்கு சனிக்கிழமை கொண்டு சென்று  சிறப்பு பூஜை நடத்தி விசர்ஜனம் செய்யப்படவுள்ளன. இதையொட்டி, மஞ்சூர் சுற்று வட்டாரப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com