உதகையில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம்

உதகையில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

உதகையில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
விநாயக சதுர்த்தியையொட்டி, நீலகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்யும் நிகழ்ச்சிகள் உதகையில் சனிக்கிழமை தொடங்கின. முதல்கட்டமாக விஸ்வ ஹிந்து பரிஷத், சிவேசனா அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஹிந்து பரிஷத் சார்பில் 56 வாகனங்களில் 71 விநாயகர் சிலைகளும், சிவசேனாவின் சார்பில் 6 வாகனங்களில் 10 விநாயகர் சிலைகளும் காந்தல் பகுதிக்கு எடுத்து வரப்பட்டு அங்கிருந்து காந்தல் பஜார், ரோகிணி சந்திப்பு, ஹில்பங்க், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக லாலி அரங்குக்கு கொண்டு வரப்பட்டன.
அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிலைகள் மீண்டும் பிற்பகல் 3 மணிக்கு ஊர்வலமாக சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, கேசினோ சந்திப்பு, மெயின் பஜார் வழியாக மத்திய பேருந்து நிலைய ரவுண்டானாவுக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து விசர்ஜனத்துக்காக சாண்டிநள்ளா நீர்த்தேக்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஊர்வலத்தில், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் நீலகிரி மாவட்டத் தலைவர் ரெக்ஸ் மணி, சிவசேனா தலைவர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஊர்வலத்தையொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா தலைமையில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 5 துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் துறையினர் 500 பேருடன் ஊர்க்காவல் படையினர் 100 பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இரண்டாவது கட்ட ஊர்வலம் உதகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில், இந்து முன்னணி அமைப்பின் சார்பில் வைக்கப்பட்டுள்ள 100-க்கும் மேற்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சாண்டிநள்ளா நீர்த்தேக்கத்தில் கரைக்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com