3 கும்கி யானைகளால் விரட்டப்பட்ட காட்டு யானை மயங்கி விழுந்து சாவு

மூன்று கும்கி யானைகளால் விரட்டப்பட்ட காட்டு யானை மயங்கி விழுந்து உயிரிழந்தது.

மூன்று கும்கி யானைகளால் விரட்டப்பட்ட காட்டு யானை மயங்கி விழுந்து உயிரிழந்தது.
வால்பாறையை அடுத்த கருமலை எஸ்டேட் பகுதிக்குள் கடந்த ஒரு வாரத்துக்கு முன் வனத்தைவிட்டு வெளியேறிய ஒற்றை யானை ஒன்று மீண்டும் வனத்துக்குள் செல்லாமல் குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதியிலேயே நடமாடி வந்தது. இந்த யானை ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதியவர் ஒருவரை மிதித்துக் கொன்றது.
இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் சுப்பையா உத்தரவுப்படி, ஆகஸ்ட் 27-ஆம் தேதி கும்கி யானை கொண்டு வரப்பட்டு அந்த யானையை வனத்துக்குள் விரட்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.  ஆனால், அது தோல்வியில் முடிந்தது.
அன்றையை தினம் இரவும் யானை குடியிருப்புப் பகுதிக்கு வந்ததால் அப்பகுதி மக்கள் விடிய விடிய உறங்காமல் அச்சத்துக்குள்ளாகி இருந்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்து தோட்ட தொழிலாளர்களும், பொதுமக்களும் ஆகஸ்ட் 28-ஆம் தேதி காலை வேலைக்குச் செல்லாமல் பொள்ளாச்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள் மேலும் இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு குடியிருப்புப் பகுதியில் நடமாடும் யானையை வனத்துக்குள் விரட்டப்படும் என்று உறுதியளித்ததால் மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
அதன்படி,  மேலும் இரண்டு கும்கி யானைகள் திங்கள்கிழமை இரவு கருமலை எஸ்டேட் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டன. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளத்தில் செவ்வாய்கிழமை  காலை 8 மணியளவில் காட்டு யானை நின்றுகொண்டிருந்துள்ளது.  அதைக் கண்ட வனத் துறையினர் டாப்சிலிப்பில் இருந்து வந்த கலீம், பரணி,  மாரியப்பன் ஆகிய மூன்று கும்கி யானைகளைக் கொண்டு அந்த யானையை வனத்துக்குள் விரட்டும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
கும்கிகளைப் பார்த்த காட்டு யானை ஓடத் தொடங்கியது. கும்கி யானைகளும் அந்த யானையை விரட்டின. மதியம் 2 மணியளவில், வெள்ளமலை எஸ்டேட் பகுதிக்கு அந்த யானை சென்றது.
அதன்பின், ஆற்றைக் கடந்து சென்று அருகே உள்ள தேயிலைத் தோட்டம் பகுதியில் நடந்து  சென்றபோது  அந்த யானை சோர்வில் மயங்கி விழுந்து உயிரிழந்தது.  
உயிரிழந்த யானை 55 வயதுடைய பெண் யானை என்றும்,  வயது முதிர்வு காரணமாக  சோர்வுற்று இறந்ததாகவும் வனத் துறையினர் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வனச் சரக அலுவலர்கள் சக்திவேல், சேகர்,  வனவர்கள் சந்திரன், முனியாண்டி உள்ளிட்டோர் யானையின் உடலைப் பரிசோதனை செய்து, அடக்கம் செய்வதற்கான நடவடிக்கையை
மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com