உதகை திரையரங்கில் சினிமா அருங்காட்சியகம் தொடக்கம்

உதகையில் பழமை வாய்ந்த திரையரங்கில் சினிமா அருங்காட்சியகம் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளது.

உதகையில் பழமை வாய்ந்த திரையரங்கில் சினிமா அருங்காட்சியகம் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளது.
 உதகையில் ஆங்கிலேயர் ஆட்சிக்  காலத்தில்  ஆடல், பாடல்  நிகழ்ச்சிகளுக்காகவும், தொடர்ந்து நாடகம் மற்றும் திரைப்படங்களைக் காண்பதற்காகவும்  கடந்த 1886-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட திரையரங்கம் அசெம்பிளி ரூம்ஸ் எனப்படும் அசெம்பிளி திரையரங்கம் ஆகும். சுமார் 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத் திரையரங்கம் நீலகிரியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு இன்னமும் பிரமாண்டமாகக் காட்சி  தரும் ஒரு சில கட்டடங்களில் ஒன்றாகும். தொடக்க காலத்தில் நாடக அரங்காக இருந்து, பின்னர் திரையரங்காக மாற்றப்பட்டது. 
பல்வேறு சாதனங்களும், கருவிகளும்  இங்கிலாந்தில் இருந்தே வரவழைக்கப்பட்டிருந்தன. 
தற்போது திரைப்படத் துறையே டிஜிட்டல்மயமாகி விட்டதால் இத் திரையரங்கும் டிஜிட்டல் மயமாகி விட்டது. இதனால்,  இங்கு  பயன்படுத்தப்பட்டு வந்த புரொஜெக்டர்,  திரைப்படச் சுருள் இயக்கும் கருவி,  டிக்கெட் வழங்கும்  கருவி,  தீயணைப்புக் கருவி உள்ளிட்ட பல்வேறு சாதனங்கள் பயன்படுத்தப்படாமலேயே இருந்தன. 
இவற்றை தற்போதைய இளையதலைமுறையினரும் தெரிந்து கொள்ளும் வகையில், இத் திரையரங்கிற்குள் புதிதாக ஓர்  அருங்காட்சியகம்  உருவாக்கப்பட்டு இக் கருவிகள் அங்கு  காட்சிக்காக  வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இக் காட்சியகத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா புதன்கிழமை திறந்து வைத்தார்.
இந்த சினிமா அருங்காட்சியம் உதகையில் அரசினர் தாவரவியல் பூங்கா செல்லும் வழியிலேயே அமைந்து இருப்பதால், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் கூடுதல் அம்சமாக இதுவும் இருக்கும் என்பதோடு,  இதற்காக கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com