நீலகிரியில் உருளைக்கிழங்கு பயிரிட ஆர்வம் காட்டாத விவசாயிகள்: 500 டன் விதைக் கிழங்குகள் சேதம்

நீலகிரி மாவட்டத்தில் கடும் வறட்சியால் உருளைக்கிழங்கு பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.
நீலகிரியில் உருளைக்கிழங்கு பயிரிட ஆர்வம் காட்டாத விவசாயிகள்: 500 டன் விதைக் கிழங்குகள் சேதம்

நீலகிரி மாவட்டத்தில் கடும் வறட்சியால் உருளைக்கிழங்கு பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். இதனால் மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மார்க்கெட்டில், விதைக் கிழங்குகள் விற்பனை ஆகாமல் தேக்கமடைந்ததுள்ளன.  
இதுகுறித்து மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு வர்த்தக சபைத் துணைத் தலைவர் எம்என்ஜி கோபால் கூறியதாவது:  
நீலகிரி மாவட்டத்தில் விளையும் உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், கேரட், பீட்ரூட், முள்ளங்கி, பூண்டு உள்ளிட்ட மலை காய்கறிகளின் முக்கிய விற்பனை மையமாக மேட்டுப்பாளையம் உள்ளது.
இங்குள்ள உருளைக்கிழங்கு மண்டிகளில் நீலகிரி மாவட்ட கிழங்குகள் மட்டுமின்றி, கர்நாடகம், ஆந்திரம், குஜராத் ஆகிய மாநிலங்களிருந்தும் கிழங்குகள் விற்பனைக்கு வருகின்றன. நீலகிரியில் இரு சீசனில் பயிராகும் உருளைக்கிழங்குகள் விற்பனைக்காக மேட்டுப்பாளையம் கொண்டு வரப்படுகின்றன.
ஜூன் மாத சீசனுக்காக நீலகிரி விவசாயிகள் பிப்ரவரி மாதம் முதலே உருளைக்கிழங்கு பயிரிடுவது வழக்கம். இதற்காக மேட்டுப்பாளையத்திலுள்ள தனியார் மண்டி வியாபாரிகள் விதை கிழங்கை வரவழைத்து, நீலகிரி விவசாயிகளுக்கென விற்பனைக்கு தயாராக வைத்திருப்பார்கள்.
ஆனால் நடப்பு ஆண்டில் பருவமழை பொய்த்து போனதால் நீலகிரி மாவட்ட பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் உருளைக்கிழங்கு பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.
இந்நிலையில், மேட்டுப்பாளையம் கிழங்கு மண்டிகளில், நீலகிரி விவசாயிகளுக்காக வாங்கி இருப்பு வைத்திருந்த விதைக் கிழங்குகள் விற்பனை ஆகாமல் தேக்கமடைந்தன.
500 டன்னுக்கும் அதிகமாக இருப்பு வைத்திருந்த விதைக் கிழங்கு அழுகி முற்றிலும் சேதமடைந்தன. இதனால் நீலகிரி விவசாயிகளும், வியாபாரிகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர் என்றார்.
விவசாயிகள் கவலை: கர்நாடகம், குஜராத், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் தற்போது உருளைக்கிழங்கு விளைச்சல் அதிகரித்து உள்ளதால், மேட்டுப்பாளையம் கிழங்கு மார்க்கெட்டில்,  வெளி மாநில கிழங்குகளின் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, நீலகிரி கிழங்கு விலையும் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் கிழங்கு மார்க்கெட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏல விவரம்: நீலகிரி கிழங்கு 45 கிலோ கொண்ட மூட்டை ரூ. 700-900 வரையும், குஜராத் கிழங்கு மூட்டை ரூ. 500-550 வரையும், கோலார் கிழங்கு மூட்டை ரூ. 550-700 வரையும், இந்தூர் கிழங்கு மூட்டை ரூ. 500-600 வரையிலும் விற்பனையாகின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com