புத்தாண்டுக் கொண்டாட்டம்: தோடரினப் புத்தாண்டுக் கோலாகலம்

2017ஆம் புத்தாண்டை வரவேற்கும் வகையில் சுற்றுலா நகரான உதகையில் வெளி மாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் புத்தாண்டை 

2017ஆம் புத்தாண்டை வரவேற்கும் வகையில் சுற்றுலா நகரான உதகையில் வெளி மாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் புத்தாண்டை  உற்சாகமாகக் கொண்டாடினர். உள்ளூர் மக்களில் பெரும்பாலானோர் வழிபாட்டு தலங்களுக்குச் சென்று வழிபட்டனர்.
 ஆங்கில புத்தாண்டையொட்டி அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நள்ளிரவு வழிபாடு நடைபெற்றது. உதகையில் இருதய ஆண்டவர் பேராலயத்தில் உதகை மறைமாவட்ட ஆயர் டாக்டர் அமல்ராஜ், பேராலய பங்குத்தந்தை அருட்திரு ஜான் ஜோசப் ஆகியோர் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினர்.
 பிங்கர்போஸ்டு தேவாலயத்தில் அருட்திரு பெனடிக்ட், குருசடி திருத்தலத்தில் அருட்திரு பீட்டர், நடுவட்டம் தேவாலயத்தில் அருட்திரு ஜெயகுமார் உள்ளிட்டோரும் நள்ளிரவு திருப்பலிகளை நிறைவேற்றினர்.
108 சங்காபிஷேக பூஜை: காந்தல் பகுதியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் புத்தாண்டையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலையில் 108 சங்காபிஷேக பூஜை நடத்தப்பட்டது. நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.
 சுற்றுலா மையங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்தனர். அரசினர் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா ஆகிய இடங்களில் அதிக அளவில் மலர்கள் இல்லாத போதிலும், சுற்றுலாப் பயணிகள் அங்கே குவிந்திருந்தனர்.
படகு இல்லம், தொட்டபெட்டா மலைச் சிகரம், மரபியல் பூங்கா, பைக்காரா நீர்வீழ்ச்சி, பைக்காரா படகு இல்லம், முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட சுற்றுலா மையங்களிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிமாகக் காணப்பட்டது.
தோடரினப் புத்தாண்டும் கொண்டாட்டம் :  நீலகிரி மாவட்டத்தின் பூர்வீகக் குடிகளான தோடரின மக்களின் மொர்பத் எனப்படும் புத்தாண்டு ஜனவரி முதல் தேதியிலேயே பிறந்துள்ளது. வழக்கமாக டிசம்பர் அல்லது ஜனவரி மாதங்களில் இந்தப் புத்தாண்டு வந்தாலும், சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போதுதான் ஜனவரி முதல் தேதியிலேயே இப்புத்தாண்டும் கொண்டாடப்பட்டுள்ளது.
 தோடரின மக்களின் 15 குலங்களைச் சேர்ந்த 60 தோடரின மந்துகளில் வசிக்கும் நூற்றுக்கணக்கானோர், தலைமையிடமாகக் கருதப்படும் உதகை அருகே உள்ள முத்தநாடு மந்து பகுதியில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி, பாரம்பரிய நடனமும் ஆடி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் எருமை நெய் கலந்த பால் சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் குவிந்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com